
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி சார்பில், வரும் மே 30-ம் தேதி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் விவசாய அணியின் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய பாஜக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மக்களை மென்மேலும் பாதிக்கும் கொள்கைகளையே செயல்படுத்தி, சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. தேசிய வங்கிகளில் சாமானிய மக்களக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்காமல், பெரும் நிறுவனங்களுக்கு கடன்களை அள்ளி வழங்கி, பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாராக் கடன் என்று சொல்லி மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்கிறது.