• May 27, 2025
  • NewsEditor
  • 0

“உங்கள் குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரம் வருகிறது” – இது அம்புலி மாமா கதையின் ஒரு வரி அல்ல, மீரட்டில் இதைத் திட்டமாக தொடங்கப்படவிருப்பதாக அறிவித்தார் உத்தரபிரதேச பாஜக அமைச்சர் தரம்பால் சிங்.

ஆனால், இந்த திட்டத்தில் சிறிய பிரச்னை இருப்பதாகக் கூறியுள்ளார்.

குப்பையில் இருந்து தங்கம்

நரேந்திர பிரதாப் என்ற ஊடகவியளாலர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் உ.பியின் உத்தரப்பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர், “வடிகால்களில் போடப்படும் குப்பைகளை, இலைகளை சுத்தப்படுத்தக் கூறியிருக்கிறோம். ஈரமான குப்பைகளை உடனடியாக அகற்றவில்லை என்றால், அவை வடிகாலில்தான் போய் சேரும். அதனால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, சுத்தமான சூழலில் இருங்கள்.

இங்கே குப்பைகளைத் தங்கமாக மாற்றும் திட்டம் இருக்கிறது. அதற்கான இயந்திரம் தயாராகி வருகிறது. அதில் சில பிரச்னைகள் உள்ளன, அவை சரியானதும் மீரட்டில் குப்பையிலிருந்து தங்கம் எடுக்கப்படும்” எனப் பேசியுள்ளார்.

அகிலேஷ் யாதவ் விமர்சனம்

இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்வினைகள் வந்தன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அமைச்சரை விமர்சித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்

அவரது எக்ஸ் தள பதிவில், “குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரம் குறித்துப் பேசுவதற்கு முன்பு, கனௌஜில் (ஒரு ஊரின் பெயர்) ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள பால் தொழிற்சாலையை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து பால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானத்துக்கு வழிசெய்யுங்கள்” என எழுதியுள்ளார்.

மேலும், பாஜகவின் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், குப்பைகளை அகற்றும் பணியிலிருந்து கமிஷன் சம்பதிப்பதைக் குறித்து இப்படி குறியீடாகப் பேசுவதாகவும் கூறியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

“நேர்மையின்மை குறித்து இவ்வளவு நேர்த்தியாக பேசுவதற்கு பாஜக தலைவர்களை பாராட்டத்தான் வேண்டும். இந்த பேச்சுகளை எல்லாம் கேட்க உத்தரபிரதேசத்துக்குக் கொடுத்து வைத்திருக்கிறது” என நக்கலாகப் பேசியுள்ளார்.

பாஜக தரப்பு விளக்கம்!

அமைச்சர் தரம்பால் சிங், குப்பைகளை உரமாக மாற்றி அதிலிருந்து செல்வத்தைப் பெற முடியும் என்பதையே அப்படிப் பேசினார் என பாஜக ஆதரவாளர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

அமைச்சர் தரம்பால் சிங்கும் தனது எக்ஸ் தளத்தில் NTPC ஆலை மூலம் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்துப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *