
நீண்டகால விசாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனுவில், “காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானால் ஆதரவு அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் உளவுத்துறை சம்பந்தப்பட்டிருப்பது, உயிரிழந்த லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் உடலுக்கு பாகிஸ்தான நாட்டு உளவு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் நேரில் சென்று மலர்வளையம் வைத்ததன் மூலம் உறுதியானது.
இந்த கொடும் சம்பவத்தால் அனைத்து நாடுகளும் பாகிஸ்தானிற்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவும் தெரிவித்துள்ளன.
இந்த பயங்கரவாத செயலுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பாகிஸ்தானிலிருந்து போலி விசாக்கள் மற்றும் நீண்ட கால விசாக்கள் என்ற பெயரில் தங்கி இருக்கும் நபர்களை வெளியேற்ற உள்துறை அமைச்சகம் கடந்த 25 ஆம் தேதி 2025-ம் தேதி உத்தரவிட்டு அதற்கான காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. ஆனால், அதையும் மீறி தமிழகம் முழுவதும் ஏராளமான பாகிஸ்தானியர்கள் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரை அண்ணா நகர் மருதுபாண்டியர் தெருவில் கஜானா சிக்கந்தர், சாகின் சிக்கந்தர் ஆகியோர் நீண்ட கால விசாவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு அரசு சலுகைகளை பெற்றுள்ளனர். இங்கேயே திருமணம் செய்து குழந்தைகள் பெற்றெடுத்து அவர்களை இந்திய குடிமக்களாக பதிவு செய்துள்ளனர், இது சட்டப்படி குற்றமாகும்.

இவர்களுடைய பெயர் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பாகம் 225- ல் 973, 976 என்ற வரிசை எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 3 முறை பாகிஸ்தானிற்கு சென்று வந்துள்ளனர்.
சமீபத்தில் இவர்களது வீட்டில் வன சட்ட விதிமுறைகளை மீறி பச்சைக்கிளிகள் வளர்த்ததாக வனத்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
நீண்ட கால விசாவை தவறுதலாக உபயோகித்து இந்திய நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணான வகையில் வாக்குரிமை, ஓட்டுரிமை என இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளையும் பெற்றுள்ளனர். இதேபோல் இவர்களது சகோதரரும் கேரளாவில் தங்கியுள்ளார். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து விசாவை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சங்கீதா மதுரை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.