
சென்னை: “எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியை பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. அதனால், திரும்ப திரும்ப அரைத்த மாவை அரைப்பது போல் இப்படி குறை கூறுகிறார். அதற்கு நான் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 27) கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 22.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 4.36 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா, 91.36 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் ஆகியவற்றை திறந்து வைத்தார்.