
வேடன்… இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.
சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.
யார் இவர்? திடீரென மலையாள ஊடகங்களில் பேசப்படக் காரணம் என்ன? தொடர்ந்து பார்க்கலாம்.
வேடன்:
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர்தான் ஹிரந்தாஸ் முரளி.
திருச்சூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்வப்னபூமி (கனவுகளின் நிலம்) என்ற பகுதியில்தான் வளர்ந்தார்.
சிறுவயது முதலே பாடல், இசை மீது ஆர்வம் இருந்தது. அதனால், தொடர்ந்து கவிதை எழுதுவது, தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது எனத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.
சிறுவயதில் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் அம்புகளைச் சரியாகக் குறிபார்த்து எறிவாராம். அப்போது அவருக்கு விளையாட்டாக வைக்கப்பட்டப் பெயர்தான் வேடன்.
இந்தப் பெயருக்குப் பின்னணியில் சாதிய அடையாளமும் இருக்கிறது என்பது புரிந்து, அந்தப் பெயராலேயே மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அது அப்படியே மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
கட்டுமான தொழில்:
பள்ளிப் படிப்பை மட்டும் முடித்த வேடன், ஒருகட்டத்தில் பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குச் செல்ல தீர்மானித்தார்.
அதன்படி அங்கிருக்கும் சிலருடன் சேர்ந்து கட்டுமான தொழிலுக்குச் சென்றிருக்கிறார். வேலை செய்துகொண்டிருக்கும்போதுகூட பாடல் பாடிக்கொண்டிருப்பார் என்கின்றனர்.
அவரின் கலை ஆர்வம் அவரை எடிட்டர் பி.அஜித்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பி.அஜித்தின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
ராப் கலைஞர்கள் அறிமுகம்:
காலப்போக்கில் அவருக்கு டூபக் ஷகுர், எமினெம், அறிவு போன்ற ராப் பாடகர்களின் பாடல் அறிமுகமாகியிருக்கிறது. அவர்களின் பாடலில் இருக்கும் வலியும், உணர்ச்சியும் அவரை அவர் சார்ந்த வரலாறு நோக்கியும், போர் பாதிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது.
அப்போதுதான் ராப் பாடல்களை எழுதத் தொடங்கியிருக்கிறார்.
முதல் ஆல்பம்:
“நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல…” என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தலைப்பில் ஜூன் 2020-ல் முதல் தனியிசைப்பாடலை வெளியிட்டார்.
அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் ‘யார்டா இந்தப் பையன்’ என மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போதுமுதல் வேடனுக்கு ஏறுமுகம்தான்.
தொடர்ந்து குரல்:
வேடனின் ராப் பாடல்களில், புரட்சிகரக் கருத்துகள் நிறைந்திருந்தன. அதேபோல எங்கெல்லாம் அடக்குமுறைகள் நடக்கிறதோ அது தொடர்பாக வேடன் பாடத் தொடங்கினார்.
பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியாகத் தெளிவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
திரைப்பயணம்:
2021-ம் ஆண்டில், வெளியான நயட்டு என்ற மலையாளப் படத்தின் நரபலி என்ற பாடலைப் பாடி திரைத்துறையில் முதல் அடியை எடுத்து வைத்தார்.
2023-ம் ஆண்டில், சர்வதேச விருது வென்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் ‘கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்’ பாடலையும் எழுதிப் பாடியிருந்தார்.
மலையாள பிளாக்பஸ்டர் மஞ்சும்மல் பாய்ஸில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் இணைந்து ‘குத்தந்திரம்’ பாடலுக்கான வரிகளை எழுதிப் பாடினார்.
அதைத் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார். ஆனால், வேடனுக்குப் படத்தில் பாடல் எழுதுவதைவிட தனியிசைப்பாடலுக்காக எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும் எனப் பேட்டியளித்திருக்கிறார்.
பிரச்னைகளும் – வழக்குகளும்!
Mee Too
2021-ம் ஆண்டு ராப்பர் வேடன் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அப்போதே ராப்பர் வேடன், “நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து அவமானப்படுகிறேன். அதற்காக உங்களின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.
போதை:
ஏப்ரல் மாதம் கொச்சியில் ராப் நிகழ்ச்சிக்காகச் சென்ற வேடன், அங்கு நண்பர்களுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கிறார்.
அங்கு ஆறு கிராம் கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயல்வேன். நான் என்னைத் திருத்திக் கொள்ள முயல்கிறேன்.
எனது ரசிகர்கள் அனைவரும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

புலிப் பல்:
ஏப்ரல் 28-ம் தேதி போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது, வேடன் புலிப் பல் கொண்ட ஒரு செயினை அணிந்திருந்ததாக காவல்துறையினர் வன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதன் விளைவாகக் கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், வன அதிகாரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் வேடனைக் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அந்தப் பல்லைப் பரிசாக அளித்ததாகவும், அதன் சட்டரீதியான தாக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் வாக்குமூலம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.
பா.ஜ.க புகார்:
“வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் சானலின் மூலம் பிரதமர் மோடியை அவதூறு செய்கிறார். இந்தப் பாடல் மூலம் சாதி அடிப்படையிலான வெறுப்பை ஊக்குவிக்கிறார். அந்த சானல் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, வேடன் தொடர்பாக NIA விசாரிக்க வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சருக்கும், என்.ஐ.ஏ-க்கும் பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் பதிவு செய்திருக்கிறார்.
சர்ச்சை:
‘அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள், உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வேடனின் செயல்பாடுகள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது அரசியல் அடக்குமுறை’ எனச் சமூக ஊடகங்களில் அவரின் ரசிகர்கள் வேடனுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் கொந்தளித்து வருகின்றனர்.
ராப்பர் வேடனுக்கு எதிராகவும் – ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆதரவு!
வேடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு வனத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், “வேடன் என்று அன்பாக அழைக்கப்படும் ஹிரந்தாஸ் முரளி போன்ற பிரபல பாடகரின் வழக்கைக் கையாளும்போது இன்னும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.
வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள், தார்மீகக் குறைபாடுகள் இருந்ததா என்பதை ஆராய்வோம்” என்றார்.
ஆளும் அரசு தரப்பிலிருந்தும், இளைஞர்கள் தரப்பிலிருந்தும் நாளுக்கு நாள் வேடனுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…