
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க ஆட்சி, மக்களுக்கான ஆட்சி இல்லை. அவர்களின் ஒரு குடும்பத்திற்கான ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி, மக்கள் நலன் பயக்காத ஆட்சி.
சொன்ன வாக்குகளை நிறைவாற்றாமல் ஏமாற்றிய திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தோடு அதிமுக வரும் சட்டமன்றத் தேர்தலை அணுக இருக்கிறது.
அதே கருத்தோடுதான் அன்பு சகோதரர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும். அதே நேரத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
சாதாரணமாக பார்த்தாலே இந்த ஆட்சியின் குற்றங்கள் மக்களுக்கு தெரிகிறது. பூதக்கண்ணாடி வைத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.அதனால், அந்த வகையில் பயாஸ்கோப் போட்டுக் காட்டுவதாக ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

`அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டம் வழங்கப்படும்’ என்று கூறி ஏமாற்றினார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவர்களை சமாதானப்படுத்த சில அறிவிப்புகளை அறிவித்தார்கள். அதனை ஏற்றுக்கொள்ள அரசு ஊழியர்கள் தயாராக இல்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். அவர்கள் முந்தைய தேர்தலில் தவறு செய்துவிட்டு தற்போது விழித்துக் கொண்டார்கள்.” என்றார்.