
பெங்களூரு: கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. பெலகாவியில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இதனிடையே, பெங்களூருவில் வரலாறு காணாத மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. கடலோர கர்நாடகாவுக்கு 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.