
இந்திய அணியில் இடம்பிடிக்கப் பல வருடமாகப் போராடிவந்த பிரியங்க் பஞ்சல், ஏமாற்றத்தோடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
127 முதல் தரப் போட்டிகளில் சதங்களுடன் 8,856 ரன்களும், 97 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3,672 ரன்களும் குவித்திருக்கும் இவர், அதிகபட்சமாக 2021-22ல் தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
ஆனால், ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
உள்ளூர் போட்டிகளில் 40+ ஆவரேஜில் ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக எக்ஸ் தளத்தில் நேற்று அறிவித்திருக்கிறார்.
தனது ஓய்வு முடிவு குறித்து ஹிந்துஸ்தான் ஊடகத்திடம் பேசிய பிரியங்க் பஞ்சல், “நான் ஓய்வு பெறவேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக என்னுள் இருந்தது.
ஏனென்றால், நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற ஒரு உந்து சக்தி இருந்தது. அதோடு, ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இருந்தது.
ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் நடைமுறையை உணர்ந்தேன். அது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.
என்னால் முடிந்தவரை நான் முயன்றேன். இந்தியா ஏ அணியில் விளையாடினேன். ரஞ்சி டிராபியில் விளையாடினேன். ஆனால், இதற்கு மேல் எதுவும் நடக்காது என்று உணர்ந்துவிட்டேன்.
இந்திய அணியில் இடம்பிடித்தும் விளையாட முடியாமல் போனது நிச்சயமாக ஒரு வருத்தம்தான். அதேசமயம் இதுவும் ஒரு சாதனைதான்.
கிரிக்கெட்டில் 1 முதல் 10 வரை லெவல் பிரித்தால், அதில் லெவல் 9-ல் நான் இருந்தேன். இருப்பினும், இந்திய அணியில் விளையாட முடியாதது உண்மையில் வருத்தம்தான்.
அதேசமயம் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வினுடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது ஒரு பெரிய விஷயம்.

ஒரு வீரருக்கு கன்சிஸ்டன்சியாக இருப்பது முக்கியம். மேலும், சிறப்பாக விளையாடுவது மட்டுமல்லாமல், சரியான நேரத்திலும் சிறப்பாக விளையாட வேண்டும்.
நீங்கள் தொடர்ச்சியாகச் சதத்துக்கு மேல் சதம் அடித்தாலும், உங்கள் அணி வெற்றி பெறவில்லையென்றால் அது சரியான நேரம் இல்லை.
அதே சமயம், நீங்கள் 30 ரன்கள் அடித்தாலும், உங்களுடைய அணி வெற்றிபெற்றால் உங்களின் பங்களிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படும்.
சர்வதேச கிரிக்கெட்டுக்கான தேவையும் அதுதான். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.” என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…