‘அஞ்சு வண்ண பூவே…’ இதயம் துளைக்கும் தாலாட்டுப் பாடல் மூலம், ட்ரெண்ட் ஆகி மீண்டும் நெஞ்சம் நெகிழ வைத்திருக்கிறார் பாடகி சாருலதா மணி.
‘காக்க காக்க’, ‘என் உச்சி மண்டைல’, ‘சில்லாக்ஸ் சில்லாக்ஸ்’, எனத் துள்ளலான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களை ஏற்கெனவே வைப் ஏற்றிய சாருலதா மணி, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் பாடிய ‘கண்ணுக்குள் பொத்திவைப்பேன்’ பாடல் நம் இதயத்தில் பொத்தி வைக்கப்பட்டு இன்ஸ்டா ரீல்ஸ்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இசையின் மீது கொண்ட பேரார்வத்தாலும் பெருங்காதலாலும் ராகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து தனது ‘இசைப்பயணம்’ நிகழ்ச்சியால் இசை ரசிகர்களை இறுகப்பற்றிக்கொண்டிருக்கும் சாருலதா மணி, தற்போது ‘தக் லைஃப்’ படத்தின் ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாடல் மூலமாக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார். சமூக வலைதளங்கள் முழுக்க ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாடலுக்கு ரசிகர்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கும் சூழலில், பெருங்கொண்டாட்ட மகிழ்ச்சியில் இருக்கும் சாருலதா மணியிடம் வாழ்த்துகளுடன் பேசினேன்.
“அஞ்சு வண்ணப் பூவே வாய்ப்பு?
“அஞ்சு வண்ணப் பூவே பாட்டுக்கு பெரிய வரவேற்பு கிடைச்சுக்கிட்டிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மணிரத்னம் சார் – ரஹ்மான் சார் கூட்டணி ஐகானிக் காம்போ! இந்த காம்போவுல நான் பாடினதை பெரிய ஆசிர்வாதமா நினைக்கிறேன். நான், கர்நாடக சங்கீத பாடகி. ‘இசைப்பயணம்’-ங்குற நிகழ்ச்சியைத் திறம்பட 80 வாரங்கள்கிட்ட நடத்தினேன்.
எந்தப் பாடல்கள், எந்த ராகத்துல இருக்குதுன்னு நிறைய ஆய்வுகள் பண்ணி, கச்சேரி பண்ணினேன். அதுக்கு, ரெஸ்பான்ஸ் கிடைச்சது. நிறைய ரசிகர்கள் இருக்காங்க. யூடியூப்ல ரெண்டு லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்காங்க.
நான், ராகங்கள் பற்றிப் பேசி, பாடுற கச்சேரியை ரஹ்மான் சாரும் பார்த்திருக்கார். என்னைத் தொடர்புகொண்டு, ‘உங்க வீடியோஸ்லாம் ரொம்ப நல்லாருக்கு. சூப்பரா பாடுறீங்க’ன்னு பாராட்டினார். அவ்ளோ பெரிய இசை மேதை. என் கச்சேரி வீடியோக்கள் பார்த்தேன்னு சொன்னதே பெரும் பாக்கியம். அதுக்கப்புறம், அவர்கூட டச்லேயே இருந்தேன். நான், ஆஸ்திரேலியாவுல இருந்தாலும் டிசம்பரில் நடக்கும் மார்கழி கச்சேரிகளுக்காக சென்னை வந்துட்டுப் போவேன்.
ஆறு மாசத்துக்கு முன்னாடி, திடீர்ன்னு ரஹ்மான் சார் ஆஃபிஸிலிருந்து போன் வந்தது. பாட்டு வெச்சிருக்காரா, இல்லையான்னு எதுவுமே தெரியாது. நார்மலா, கேஷுவலாத்தான் போனேன். மணிரத்னம் சார், கார்த்திக் நேத்தா சார் எல்லாருமே இருந்தாங்க. ‘இவங்கதான், சாருலதா மணி… அஞ்சு வண்ணப் பூவே பாட்டை பாடப் போறாங்க’ன்னு மணிரத்னம் சார்க்கிட்ட அறிமுகப்படுத்திவெச்சார்.
மணி சார் என்னைப் பார்த்து, இந்த சாங் பாடிடுவீங்களான்னு கேட்டார். ‘நிச்சயமாக சார்! உங்களுடைய பெரிய ஃபேன் சார்’ அப்படின்னு சொன்னேன். இரவு பத்தரை மணியிலிருந்து அதிகாலை 3 மணிவரைக்கும் ரெக்கார்டிங் போச்சு. பிரம்மமுகூர்த்தத்துலதான் இந்தப் பாட்டு ரெக்கார்டிங் பண்ணினாங்க.
ரஹ்மான் சார், அழகா சொல்லிக்கொடுக்க நான் பாடினேன். ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. சில இடங்களில் நான் பாடும்போதே அழுதுட்டேன். அதெல்லாம், இப்போ வரவேற்பா குவிஞ்சுக்கிட்டிருக்கு. ‘அஞ்சு வண்ணப் பூவே’ தாலாட்டு பாடல்.
இத்தாலியில் இசை குறித்து பி.ஹெச்.டி. பண்ணினேன். ஆஸ்திரேலியாவில் போஸ்ட் ஃபெல்லோஷிப்பும் பண்ணினேன். அந்த போஸ்ட் ஃபெல்லோஷிப் என்னன்னா, அகதிகளாக வரக்கூடிய தாய்மார்களின் தாலாட்டு பாடல்கள்தான். அதுக்காக, உலகம் முழுக்க இருக்கக்கூடிய அகதித் தாய்கள் குறித்து ஆய்வு பண்ணியிருக்கேன். இதற்காக, விருதுகளும் வாங்கியிருக்கேன். ஆனா, தாலாட்டு பாடலான ‘அஞ்சு வண்ணப் பூவே…’ பாடலை நானே பாடுவேன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. இதுதான், பிரபஞ்சத்தின் விந்தை. அந்தப் பாட்டை பாடும்போது, அந்தத் தாய்மார்களின் ஃபீலிங்க்ஸ் எனக்குள் வந்தது. அதுமட்டுமில்லாம, எனக்கு இரட்டைக் குழந்தைகள். என் மகள், மகனை நினைச்சுத்தான் பாடினேன். அதனாலதான், இவ்ளோ நேச்சுரலா வந்திருக்கு பாட்டு.”
“அஞ்சு வண்ணப்பூவே அர்த்தம் என்ன? படத்தில், எந்த சூழலில் வருகிறது?”
“ஐந்து வண்ண பூக்கள் என்பதே ரொம்ப ஸ்பெஷலான வார்த்தை. அதிசயமானவர்களைப் பற்றி பாடுவது. பஞ்ச பூதம், சிவனுக்கு ஐந்து முகம் என சொல்வது போல. ஐந்து என்றாலே ஸ்பெஷல்தான். ரொம்ப ரேர் குவாலிட்டி. ஒரு தந்தை மகனைப் பார்த்து பாடலாம், தாய் பாடலாம், பாட்டி பாடலாம், அக்கா பாடலாம். ஆனால், படத்தில் எந்த சூழலில் வருகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், எல்லா உணர்வுகளும் கலந்தமாதிரி பாடினேன்.”
“அஞ்சு வண்ணப் பூவே பாடல் ரஹ்மான் வெர்ஷனும் பாராட்டுக்களைக் குவிச்சிட்டிருக்கே?”
“ரஹ்மான் சார், கிரேட் கம்போஸர். ரொம்ப எளிமை. ரொம்ப கம்ஃபர்டபிளா உணரவெச்சார். இப்படி, ஒரு அழகான பாட்டைக் கொடுத்ததுக்காக, ரஹ்மான் சாரை எனக்கு வரம் கொடுத்த சாமின்னுதான் சொல்லுவேன். அவருக்கு பெரிய நன்றியைச் சொல்லிக்கிறேன். என் பாடல்களிலேயே என்னுடைய ஃபேவரைட் ‘அஞ்சு வண்ணப் பூவே’ தான்.
ரஹ்மான் சார் பாடின இதே பாடல் எனக்கு ஃபேவரைட் ஆகிடுச்சு. அந்தக் குரலைக் கேட்டு அப்படியே அழுதுட்டேன். நம்மளோட இதயத்தைத் தொடுறமாதிரி ரொம்ப அழகா பாடியிருக்கார். ஆழ்மனசுல பேசுறமாதிரி இருக்கு. அவர், எதிர்பார்த்ததை நான் என்னோட ஸ்டைலில் கொடுத்திருந்தேன். அவர், மெலடியா மாற்றி ஒரு வலியை சொல்ற மாதிரி அற்புதமாகப் பாடியிருக்கிறார். ஒரு மருந்து மாதிரி, ஒரு ஹீலிங் தெரபி மாதிரி பாடியிருந்தார். அவர்க்கிட்ட நான் பாடும்போது என்னையே மறந்துட்டேன்னுதான் சொல்லணும்.”
“பாடலுக்காக கிடைத்த மறக்கமுடியாத பாராட்டு?”
“ஒவ்வொருத்தரின் பாராட்டும் எனக்கு ஸ்பெஷல்தான். சுஜாதா மேடம், ரொம்ப அற்புதமா பாடியிருக்கேன்னு என் நம்பரை வாங்கி மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. ஸ்ரீனிவாஸ் சார், அபிராமி மேடம் எல்லாம் ரொம்ப பாராட்டியிருந்தாங்க. ஶ்ரீனிவாஸ் சார் இன்ஸ்டாவுல பாராட்டி போஸ்ட்டே போட்டிருக்கார். மணிரத்னம் சார், கை கொடுத்து நல்லாருக்குன்னு பாராட்டினார். முக்கியமா ரஹ்மான் சாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. இப்போ, மக்கள் இந்தப் பாட்டை உச்சத்துல வெச்சுட்டாங்க.”
“சினிமாவில் துள்ளல் இசைப் பாடல்கள், சாஸ்திரிய பாடல்கள்ன்னு நீங்க பாடின எல்லா பாட்டுமே பெரிய ஹிட் ஆகியிருக்கு. சினிமாவில் ஏன் அதிகமாக பாடுவதில்லை?”
“எத்தனை பாடல்கள் பாடினோம்ங்கிறதைவிட எத்தனை பாடல்களை தரமா பாடினோங்கிறது முக்கியம். அதாவது, குவாலிட்டித்தான் முக்கியம். இப்பவும் ‘என் உச்சி மண்டையில’ பாட்டை நீங்கதான் பாடுனீங்களான்னு ஆச்சர்யமா கேட்கிறாங்க. ‘ஜில்லாக்ஸ்’… பாட்டு கர்நாடிக் மியூசிக்ல குத்து பாட்டுன்னு சொல்லலாம். விஜய் ஆண்டனி சார் என்னுடைய ‘இசைப் பயணம்’ நிகழ்ச்சியைப் பார்த்துட்டு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். அதுவும் இரண்டுமே விஜய் சார் படங்கள். இப்பவும் ரீல்ஸுல இந்தப் பாட்டை பாடித் தள்ளுறாங்க. அதேமாதிரி, ‘கண்ணுக்குள் பொத்திவைப்பேன்’ பாடல் எல்லா மேடைகளிலும் பாடப்படுது. முகாரி ராகத்துல பாடினேன். ரொம்ப கஷ்டமான ராகம் அது.
நீங்கதான், பாடணும்னு வாய்ப்பு கொடுத்தார் ஜிப்ரான் சார். அது பாடினதை மறக்கவே முடியாது. நான், 2015 லிருந்து ஆஸ்திரேலியாவில் இசை குறித்து ஆய்வு செய்துகிட்டு வர்றேன். நிறைய வாய்ப்புகள் வந்தது. இசை பற்றின ஆராய்ச்சியில இருந்ததால் பண்ண முடியல. ஆனா, ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாடலுக்குப் பிறகு முழுக்க முழுக்க பாடணும்னு சென்னை வந்துட்டேன். இப்போ, நிறைய வாய்ப்புகள் வருது. இனிமே தொடர்ந்து என் பாடல்களைக் கேட்கலாம்.”
‘ராகங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து பி.ஹெச்.டியே முடிச்சிருக்கீங்க. இளையராஜா, ரஹ்மான் பாடல்களில் எது ரொம்ப கஷ்டமான ராகங்கள் கொண்ட பாடல்கள்?”
“ஜானகி அம்மா பாடின ‘இசை அரசி’ பாடல், ‘குணா’ படத்து ‘பார்த்த விழி பார்த்தபடி’ பாடல்களைச் சொல்லலாம். சூர்யா, விவாதி ராகங்கள்ல இந்தப் பாடல்கள் அமைஞ்சது. ரொம்ப ரொம்ப கஷ்டமான ராகங்கள். விவாதி ராகம் நோட்ஸ் எல்லாம் ரொம்ப நெருக்கமா இருக்கும். ரஹ்மான் சார் மியூசிக்ல ‘மின்சார பூவே’, ‘சந்தன தென்றலை’ பாடல்கள் வசந்தா ராகம், கீரவாணி ராகத்துல அமைஞ்சது. இதுவும், கஷ்டமான ராகங்கள்.”
“உங்கள் தங்கை, பாடகி மதுமிதா பாடல்களில் உங்கள் ஃபேவரைட்? உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்க…?”
“எங்கம்மா ஹேமலதா மணி, மிகப்பெரிய வீணை வித்வான். முக்கியமான விஷயம் என்னன்னா, எங்கம்மாவுக்கு கண்ணு தெரியாது. விழிச்சவால் கொண்டவரா இருந்தாலும் ரொம்ப நல்லா வீணை வாசிப்பாங்க. அழகா பாடுவாங்க. எங்கப்பா கப்பலில் பணிபுரிஞ்சதால வீட்டிலேயே இருக்கமுடியாத சூழல். எல்லா பிள்ளைங்களும் அம்மாவை புடிச்சுக்கிட்டு ஓடியாடி விளையாடுவங்க. ஆனா, எங்களுக்கு அப்படியொரு சூழல் அமையவே இல்ல. அதனால, ரொம்ப ஏக்கமா இருக்கும்.
அம்மாவோட மடியில உட்கார்ந்துக்கிட்டுத்தான் வீணை கத்துக்கிட்டேன். என் தங்கச்சியும் நானும் இன்னைக்கு பாடகிகளா இருக்கோம்னா அம்மா சொல்லிக்கொடுத்த இசைதான் காரணம். அதனால, ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாட்டை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். மற்றபடி, என் தங்கச்சி பாடின ‘7ஜி ரெயின்போ காலனி’ பட ‘கனா காணும் காலங்கள்…’ பாட்டு ரொம்ப பிடிக்கும்.
என் கணவர், கார்த்திக் பாலசுப்பிரமணியம் என்னை என்கரேஜ் பண்ணலைன்னா, இந்த அளவுக்கு இசை தொடர்பா ஆராய்ச்சிகள் பண்ணியிருக்க முடியாது. ரொம்ப சப்போர்ட்டிவ். ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாடல் அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எங்க மாமியார் எல்லாம் போன் பண்ணி ரொம்ப பாராட்டினாங்க. இந்த நேரத்துல என் அன்புக் கணவருக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.”
“உங்களோட எதிர்கால லட்சியம்?”
“இசையில் நிறைய ஆராய்ச்சி பண்ணிருக்கேன். நிறைய மொழிகள் தெரியும். உலக மேடைகள்; அரங்கில் எல்லாம் பாடியிருக்கேன். சுயாதீனமா நிறைய பாடல்கள் வெளியிட்டிருக்கேன். இசைத்துறையில் எல்லோருக்கும் இருக்கக்கூடிய மாதிரிதான், எனக்கும் ஒரு கனவு இருக்க்கு. அது, கிராமி, ஆஸ்கர் விருதுகளை வெல்லவேண்டும் என்பதுதான்”