
இந்தியாவைச் சேர்ந்த கார் ரேஸ் வீரர் குஷ் மைனி, கடந்த சனிக்கிழமையன்று மொனாக்கோவில் நடைபெற்ற ஃபார்முலா 2 (F2) ரேஸில் ஸ்பிரின்டர்ஸ் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
டாம்ஸ் லுாகாஸ் ஆயில் (DAMS Lucas Oil) என்ற பிரெஞ்சு அணியின் சார்பில் பங்கேற்று, F2 ரேஸில் வெற்றிபெற்ற முதல் இந்தியரான இந்த 24 வயது வீரருக்கு, இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உட்பட பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
“மொனாக்கோவில் முதல் இந்தியனாக வெற்றிபெறுவது மிகப் பெரிய கௌரவம் மற்றும் என் கனவு நனவான தருணம்.” என்று குஷ் மைனி நெகிழ்கிறார்.
தன்னுடைய கனவு மட்டுமல்லாமல் F2 ரேஸில் இந்தியாவின் கனவையும் நிறைவேற்றியிருக்கும் 24 வயது இளம் வீரர் குஷ் மைனி யார்?
ரேஸ் குடும்பம்!
குஷ் மைனி 2000-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி பெங்களுருவில் பிறந்தார். இவரின் குடும்பமே கார் ரேஸ் பின்னணியைக் கொண்டது.
இவரின் தந்தை கவுதம் மைனி, ஃபார்முலா 3 (F3) ரேஸில் ஈடுபட்டிருக்கிறார். இவரின் சகோதரர் அர்ஜுன் மைனி GP3 மற்றும் ஃபார்முலா 2 ரேஸில் போட்டியிட்டிருக்கிறார்.

2016-ல் தொடங்கிய பயணம்!
இரண்டுமுறை ஃபார்முலா 1 (F1) சாம்பியன் பட்டம் வென்ற மிகா ஹக்கினெனால் குஷ் மைனிக்கு மென்ட்டாராக இருந்திருக்கிறார்.
குஷ் மைனி முதல்முறையாக 2016-ல் இத்தாலிய F4 சாம்பியன்ஷிப்பில் BVM சார்பில் போட்டியிட்டு தனது கரியரைத் தொடங்கினர்.
தொடர்ந்து இரண்டாண்டுகள் ரேஸிங்கில் முன்னோக்கி நகர்ந்த குஷ் மைனி, 2018-ல் லானன் ரேசிங் அணியுடன் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் களமிறங்கினார். அதில், 366 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
பின்னர், 2019-ல் யூரோ கோப்பையில் போட்டியிடத் தொடங்கிய குஷ் மைனி 2020-ல் கொரோனா சூழல் காரணமாகத் தனது திட்டங்களை மாற்றிக்கொண்டு பிரிட்டிஷ் F3 தொடருக்குத் திரும்பினார்.
அந்த சீசனில் மூன்று ரேஸில் வென்றவர், சீசன் முடிவில் 448 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்தார்.
மொனோக்கோவில் முதல் இந்தியர்!
2021-ல் F3 ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியான மும்பை ஃபால்கன்ஸ் அணிக்காகப் போட்டியிட்டு, கடைசி 9 ரேஸில் 7 புள்ளிகள் பெற்று 11-வது இடத்துக்கு முன்னேறினார்.
அடுத்தாண்டு, FIA ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் MP Motosport அணியில் கயோ கோலெட் மற்றும் அலெக்சாண்டர் ஸ்மோலியருடன் களமிறங்கினார்.
அந்த சீசன் முடிவில், 14-வது இடம்பிடித்த குஷ் மைனி, 2023-ல் FIA ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் Campos Racing அணி சார்பில் களமிறங்கி, 11-வது இடத்துடன் நிறைவுசெய்தார்.

அதைத்தொடர்ந்து, 2023-24-ல் ஃபார்முலா E ரேஸில், மஹிந்திரா ரேஸிங் அணியில் ரிசர்வ் ஓட்டுநராகச் சேர்ந்த குஷ் மைனி, கடந்த ஆண்டு FIA ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் Invicta Racing அணியில் களமிறங்கி ஒரு வெற்றி உட்பட 74 புள்ளிகளுடன் 13-வைத்து இடம்பிடித்தார்.
தற்போது, மொனாக்கோவில் நடைபெற்ற ஃபார்முலா 2 (F2) ரேஸில் ஸ்பிரின்டர்ஸ் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
இதுமட்டுமல்லாது, இங்கிலாந்தின் பி.டி.டபுள்யூ ஆல்ஃபைன் ஃபார்முலா 1 அணியின் ரிசர்வ் ஓட்டுநராக ரேசிங் உலகளவிலும் அறியப்படுகிறார்.
குஷ் மைனியின் இத்தகைய வளர்ச்சிக்கு JK ரேசிங் மற்றும் TVS ரேசிங் போன்ற இந்திய மோட்டார்ஸ்போர்ட் நிறுவனங்களும் ஆரம்பம் முதலே ஆதரவளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.