
மாதவிடாய் காலத்தில் அசௌகரியம் நிலவுவதாக தெரிவித்து மருத்துவ விடுப்புக் கோரிய பெண்ணிடம், ‘நீங்கள் சொல்வது உண்மை என்று நிரூபிக்க, பேன்ட்டை கழற்றி நிரூபிக்க வேண்டும்’ என கட்டாயப்படுத்தியுள்ளது, பெய்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கெங்டன் இன்ஸ்டிடியூட் (Gengdan Institute of Beijing University of Technology). இதுதொடர்பான வீடியோ, கடந்த மே 15-ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக, சீனப் பல்கலைக்கழகத்தின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
வைரலாகிய அந்த வீடியோவில், ‘மாதவிடாய் வலி அனுபவிக்கும் அத்தனை பெண் மாணவிகளிடமும் இத்தகைய பரிசோதனைகள் நடத்தப்படுகிறதா’ என மாதவிடாய் விடுப்புக் கோரிய பெண் கேட்கிறார். அதற்கு, ‘இது இந்த பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை கொள்கை. இது நான் உனக்கு விதித்த தனிப்பட்ட விதி அல்ல. மாதவிடாய் விடுப்பு வேண்டுமென்றால், பேன்ட்டை கழற்றி மாதவிடாய் இருப்பதை நிரூபிக்க வேண்டும். நிரூபிக்காமல், விடுப்பு கடிதத்தை வழங்க இயலாது’ என ஒரு பெண் ஊழியர் பதிலளிக்கிறார். ஆனால், இந்த நடைமுறை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் கொள்கை என்பதை நிரூபிக்க, எந்த எழுத்துப்பூர்வ ஆதாரத்தையும், விடுப்பு மறுத்த அந்த பெண் ஊழியர் விடுப்புக் கோரிய மாணவியிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின், மாணவி மற்றொரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், மருத்துவமனைக்குச் சென்று தேவையான ஆவணங்களை வெற்றிகரமாகப் பெற்றதாக கூறிய மாணவி, ‘மாதவிடாய் காலத்தில் பெண்கள் விடுப்புக் கேட்க, நியாயமான பரிவுமிக்க கொள்கை வேண்டும் என விரும்புகிறேன்’ என கூறியிருக்கிறார்.
‘மாதவிடாய் வலி அனுபவிக்கும் அத்தனை பெண் மாணவிகளிடமும் இத்தகைய பரிசோதனைகள் நடத்தப்படுகிறதா’ என மாதவிடாய் விடுப்புக் கோரிய பெண் கேட்கிறார்.
மே 16 அன்று, மாணவியின் வீடியோக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம். அதில், ‘அந்த வீடியோவில் பல்கலைக்கழகம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மருத்துவ நடைமுறை விதிகளைப் பின்பற்றினோம். எந்தத் தவறும் இழைக்கவில்லை. மாணவிகளின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த பின், மாணவிகள் சம்மதத்தைப் பெற்றுதான் மேலும் சிகிச்சைகள் மேற்கொள்வோம். ஆனால், கருவிகளோ, உடல் பரிசோதனைகளோ செய்து மாணவிகளை சோதித்ததில்லை’ எனத் தெரிவித்தது.
மாணவிக்கு மாதவிடாய் விடுப்பு மறுத்த அந்த பெண் ஊழியர், ‘பல மாணவிகள் அடிக்கடி விடுப்புப் பெறுவதற்காக, மாதவிடாயைக் காரணம் காட்டுவது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் எங்கள் பல்கலைக்கழகத்தில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிகளின் முதன்மை நோக்கம், மருத்துவ விடுப்பு துஷ்பிரயோகத்தை தடுப்பதே’ என சீன ஊடகம் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்திருக்கிறார்.

இச்சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களைத் தவிர்க்க, பல்கலைக்கழகம் அதன் நெறிமுறைகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.