• May 27, 2025
  • NewsEditor
  • 0

செஸ் உலகில் 2013-ல் அப்போதைய உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்திய பிறகு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, தொடர்ச்சியாக ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் மேக்னஸ் கார்ல்சன்.

பின்னர், இப்போட்டியில் ஆடுவதற்காகச் செய்ய வேண்டிய முன் தயாரிப்புகள் கடும் அயர்ச்சியையும் அழுத்தத்தையும் கொடுப்பதாகக் கூறி 2023 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறினார் கார்ல்சன்.

அந்தத் தொடரில், சீனாவின் டிங் லிரன் சாம்பியன் வெற்றிபெற, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் டிம் லிரனை வீழ்த்தி உலக சம்பியனானார் குகேஷ்.

மேக்னஸ் கார்ல்சன் vs குகேஷ் – நார்வே செஸ் தொடர்

நார்வே செஸ் தொடர்

அதன்பிறகு, உலக சாம்பியன் குகேஷும், உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனும் எப்போது மோதுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியது. இத்தகைய சூழலில்தான், நார்வே செஸ் தொடர் நேற்று (மே 26) தொடங்கியது.

இதில், ஆடவர் பிரிவில் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா, குகேஷ் (இந்தியா), அர்ஜுன் எரிகைசி (இந்தியா), ஃபேபியானோ கருவானா, வெய் யி ஆகியோரும், மகளிர் பிரிவில் ஜு வென்ஜுன், லீ டிங்ஜி , கோனேரு ஹம்பி (இந்தியா), அன்னா முசிச்சுக், ஆர் வைஷாலி (இந்தியா), சரசாதத் காடெமல்ஷாரீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன் முதல் சுற்றில், குகேஷும் கார்லசனும் நேருக்கு நேர் மோதினர். இதில், போட்டிக்கு வேண்டுமென்றே தாமதமாக வந்து எதிர் வீரரின் பொறுமையை சோதிக்கும் தனது வழக்கமான பாணியை நேற்றும் பின்பற்றினார் கார்ல்சன்.

போட்டி விறுவிறுப்பாக டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் கார்ல்சன் தனது 55-வது நகர்வில் குகேஷை வீழ்த்தி முதல் சுற்றை வென்றார்.

இந்த வெற்றிக்குப் பிறகு TV2 ஊடகத்திடம் பேசிய கார்ல்சன், “இந்தப் போட்டியில் நான் எப்படி வெற்றிபெற்றேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இது டிராவில் முடியும் என்றுதான் நினைத்தேன்.” என்று கூறினார்.

அதேசமயம் கார்ல்சன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தி வயர் (The Wire) என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் வரும் ஒமர் லிட்டில் கதாபாத்திரத்தின், “You come at the king, you best not miss” என்ற பிரபல வாக்கியத்தைப் பதிவிட்டிருந்தார்.

நேற்று நடைபெற்ற மற்றொரு முதல் சுற்றில், சீனாவின் வெய் யீ-யை இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *