
கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா கட்சியைத் தொடங்கினார், பவன் கல்யாண். பல தோல்விகளுக்குப் பிறகு தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகவும் ஆகிவிட்டார். இந்தச்சூழலில்தான் தமிழக அரசியலில் நடக்கும் பல விஷயங்களுக்குத் தனது கருத்தைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு ‘சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்திலிருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்துப் போவீர்கள்’ என உதயநிதியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதேபோல், ‘லாப நோக்கத்துக்காகத் தமிழ்ப் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கிறார்கள்?’ என மறைமுகமாக விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்.
`தமிழ்நாட்டில் பலமான தலைமை அவசியம்’
பிறகு கடந்த பிப்ரவரியில் மூன்று நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாகத் தமிழகம் வந்தார். சுவாமிமலை, அழகர் கோவில், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அறுபடை முருகன் கோவில் வழிபாட்டில் ஈடுபட்டனர். சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர். அப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது கவலையளிக்கிறது. இப்பிரச்சினையை இணக்கமான முறையில் நிவர்த்தி செய்ய வேண்டும்’ என வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், “தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்கள் பாதுகாப்புடன், மாநில வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
இவர்கள் இருவரும் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டனர். தற்போது தமிழ்நாட்டில் பலமான தலைமை அவசியம். தமிழ்நாட்டின் பிரச்னைகளை நான் அறிவேன். அவற்றைக் களைய ஜனசேனா கட்சி சார்பில் நான் எப்போதும் உதவத் தயாராக உள்ளேன்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து சந்தானம் படத்தில் இடம்பெற்ற கோவிந்தா பாடலுக்கு ஜனசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பாடல் நீக்கப்பட்டிருக்கிறது. இப்படியாகத் தமிழக அரசியலில் பவன் கல்யாண் குறித்த பேச்சு இருந்து கொண்டே இருக்கிறது. இதற்குப் பின்னால் பா.ஜ.க-தான் இருக்கிறது என்கிற கருத்து நிலவி வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பா.ஜ.க கருத்தரங்கத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

பாஜக கருத்தரங்கில் பயன் கல்யாண்
சென்னை, திருவான்மியூரில் பா.ஜ.க சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மைக் பிடித்த பவன், “நான் தமிழ்நாட்டை விட்டுச் சென்று 30 வருடங்கள் ஆகிறது. ஆனால் தமிழ்நாடு என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் ஆழமானது. அதனால் தமிழ்நாட்டின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. எனக்கு எம்.ஜி.ஆர், ஜல்லிக்கட்டு பிடிக்கும். தமிழ் கடவுள் முருகன் இருக்கும் பூமி இது. இங்கு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் தேர்தலில் வெற்றிப்பெற்றால் இவிஎம் மிஷின் சூப்பர் என்பார்கள். அதுவே தோற்றுவிட்டால் மிஷனில் முறைகேடு என்பார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தில் இரட்டை வேஷம் போடுகிறார்கள். இந்த முறையை அவர்கள் ஆட்சியில் இது கொண்டுவரப்பட்டபோது நல்லது என்றார்கள். இப்போது கெட்டது என்கிறார்கள்.
1952 முதல் 1967 வரை சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில்தான் நடத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என முன்மொழிந்தது அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதிதான். அப்போது கருணாநிதி விரும்பியதை இப்போது அவரின் கட்சியினரே எதிர்க்கிறார்கள்.

அப்படி எதிர்ப்பவர்கள் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை படிக்க வேண்டும். ஏனெனில் அதில் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தனது அப்பாவின் கனவு நிறைவேறக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். கடந்த 20 வருடங்களாக தேர்தல் தொடர்ந்து வருவதால் அரசும், நிர்வாகமும் சோர்வடைகிறது. எனவே, குறைவான பலத்தில் பெரிதான வேலையை செய்யும் திட்டம்தான் ஒரே நாடு ஒரே தேர்தல். நாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
ஒரே நாடு ஒரேத் தேர்தல் விவகாரத்தில் உங்கள் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும். எதாவது பிரச்னை இருந்தால் அமர்ந்து பேசி விவாதிக்கலாம். ஒரே நாடு ஒரேத் தேர்தல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் அவசியமானது” என்றார்.
தொடர்ந்து அடுத்த மாதம் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ள இருக்கிறார், பவன். மேலும் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு ஆதரகவாக பிரச்சாரம் மேற்கொள்ளவும் திட்டம் வைத்திருக்கிறார்.

தெலுங்கு மொழி பேசும் மக்கள்!
இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “கடந்த ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தமிழகத்தில் பேசப்படும் மொழிகள் பற்றிய விவரங்களை வெளியிட்டது. அதில் 6.4 கோடி பேர் தமிழ் பேசுகிறார்கள். இரண்டாவது இடத்தில் சுமார் 42 லட்சம் பேர் தெலுங்கு மொழியைப் பேசுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தெலுங்கு மொழி பேசும் மக்களின் வாக்கு வங்கியும் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது தெலுங்கு மக்களின் வாக்குகள் பெரும்பாலும் தி.மு.க-வுக்குத்தான் செல்கிறது. அந்த வாக்குகளைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொண்டுவர பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமை விரும்புகிறது. அதாவது பவன் கல்யாணை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வதன் மூலம் தே.ஜ கூட்டணிக்குத் தெலுங்கு மக்களின் வாக்குகள் கிடைக்கும் எனக் கணக்குப் போடுகிறது.
மறுபக்கம் தனது கட்சியைத் தேசிய கட்சியாக உயர்த்தும் ஆசையில் இருக்கிறார், பவன். அதாவது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் போட்டியிடுவதால் தேசிய கட்சியாக இருக்கிறது. ஏற்கெனவே ஆந்திரா, தெலங்கானாவில் பலத்துடனும், கர்நாடகாவிலும் ஜனசேனா இருக்கிறது. இந்த வரிசையில் தமிழகத்தில் கட்சியைத் தொடங்குவதன் மூலம் வரும்காலத்தில் தேசியக்கட்சியாகிவிடலாம் எனப் பவன் திட்டமிடுகிறார். இதனால் பா.ஜ.க-வின் திட்டத்துக்கு அவர் ‘ஓகே’ சொல்லிவிட்டார்” என்றனர்.

முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தி.மு.க-விலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு பவன் கல்யாண்-ஐ சந்தித்துப் பேசியது. அதில் தமிழக பா.ஜ.க-வினரும் இடம்பெற்றிருந்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணைச் சந்தித்துப் பேசினேன். அப்போது பேசிய அவர், ‘தமிழகம் மீது எனக்கு அக்கறை இருக்கிறது. தமிழ் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன். குறிப்பாகத் தமிழக மீனவர், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் பிரதமர் மோடியை வலியுறுத்துவேன். இந்து மகா கடலில் அமெரிக்காவின் ராணுவ தளம் இருக்கிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்’ என்றார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிக்குக் குறைந்தபட்சம் 4,000 தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் வாங்கு வாங்கியாக மட்டுமே தி.மு.க தங்களைப் பயன்படுத்துவதாகக் கோபத்தில் இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் தங்களுக்கான தலைவராக வைகோ வருவார் என நம்பினார்கள். அது நடக்காததால் விஜயகாந்த்துக்கு வாக்களித்தார்கள். தற்போதும் தே.மு.தி.க-வும் கீழே இறங்கிவிட்டது. இதனால் பவனுக்கு ஆதரவு கிடைக்கலாம். விரைவில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாகப் பவன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் தி.மு.க, ம.தி.மு.க-வுக்கு சிக்கல் ஏற்படும். இதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில் நிலவும் பல பிரச்னைகளைக் கையில் எடுக்கவும் பவன் தயாராகி வருகிறார்” என்றார்.
.jpg)
ஆந்திராவிலேயே பல தொகுதிகளில் ஜனசேனாவுக்கு போதுமான அளவுக்குக் கட்டமைப்புகள் இல்லை. இப்படியான சூழலில்தான் தமிழக அரசியலில் பவன் கல்யாண் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். எனவே அவரால் இங்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!