
தாய் – தந்தை அரவணைப்பின்றி லிலோவும் (மையா கெலோஹா) அவருடைய சகோதரி நானியும் (சிட்னி எலிசபெத்) தனித்து வாழ்ந்து வருகின்றனர்.
வேற்று கிரகத்தில் வாழும் ஏலியன் ஆராய்ச்சியாளர் ஜும்பா, ‘626’ என்ற ஏலியனை உருவாக்குகிறார். அந்த 626 ஏலியன் உண்டாக்கும் அபாயத்தை அறிந்து, ஏலியன் கூட்டமைப்பு 626 ஏலியனையும் ஆராய்ச்சியாளரையும் சிறைப்படுத்துகிறது.
அங்கிருந்து அந்த 626 ஏலியன் பூமிக்குத் தப்பி ஓடுகிறது. அந்த ஏலியனைப் பிடித்து வர, அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
ஒரு ஏலியன் ஏஜெண்டுடன் அந்த 626 ஏலியனைப் பிடிக்க, மனிதராக உருமாறி பூமிக்கு விரைகிறார் ஜும்பா. பூமியில் நண்பர்கள் யாரும் இல்லையென்ற ஏக்கத்துடன் வாழும் லிலோவிடம் ஆதரவாக வந்து இணைகிறது இந்த ஸ்டிச் என்கிற 626 ஏலியன்.
லிலோவுக்கு இந்த ஸ்டிச் எப்படியான துணையாக வந்தது, லிலோவின் மழலை அன்பு அந்த ஸ்டிச்சை எப்படி மாற்றியது, ஸ்டிச்சைப் பிடிக்கப் பூமிக்கு வந்த ஆராய்ச்சியாளர் ஜும்பா அந்த ஏலியனைப் பிடித்தாரா போன்ற கேள்விகளுக்கு ஃபேண்டஸியாகச் சொல்கிறது இந்த ‘லிலோ & ஸ்டிச்’ 3டி சினிமா.
2002-ல் ‘லிலோ & ஸ்டிச்’ அனிமேஷன் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டிருந்தது டிஸ்னி. அதனைத் தொடர்ந்து, லிலோ மற்றும் ஸ்டிச் கதாபாத்திரங்களை வைத்து அடுத்தடுத்து அனிமேஷன் தொடர்களும் வெளியாகின. அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத் தான் இந்த லைவ் ஆக்ஷன் படத்தை மீண்டும் எடுத்திருக்கிறது டிஸ்னி.
தாய் – தந்தையின்றி சோகத்துடன் வாழும் குழந்தையாக ஒரு புறம், ஆதரவு கொடுக்க நண்பர்கள் யாரும் இல்லை என்ற ஏக்கத்துடன் மறுபுறம் என, எமோஷன்களில் கச்சிதமாக நடித்திருக்கிறார் குழந்தை நட்சத்திரம் மையா கெலோஹா.
அதுமட்டுமின்றி, ஆங்காங்கே தன்னுடைய சுட்டித்தனங்களால் கெட்டிகாரத்தனமாகவும் மிளிர்கிறார்.

குடும்பத்தை ஒற்றை நபராக இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற பொறுப்பையும், தங்கைக்காக துணிந்து களமிறங்குபவராகவும், சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சிட்னி எலிசபெத்.
நமக்கு மிகவும் பரிச்சயமான ஆலன் (சாக் கலிஃபியானாக்கிஸ்), ஜும்பா கதாபாத்திரத்தில் தன்னுடைய உடல் மொழியால் நகைச்சுவை விருந்து படைக்கிறார்.
அவருடைய நகைச்சுவை காட்சிகளில் தன்னால் இயன்றளவுக்குக் கைகொடுத்திருக்கிறார் பில்லி மக்னுசன்.
கிராபிக்ஸ் இடம்பெறும் காட்சிகளைக் கவனமாக கையாண்டு, அதற்கான இடைவெளியையும் சரியாகக் கொடுத்து, நுணுக்கமாக வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகல் ப்ளக்.
ஸ்டிச் செய்யும் சேட்டைகளையும், லிலோ செய்யும் சுட்டித்தனங்களையும் ஃபாஸ்ட் கட்டில் இணைத்து, நல்ல அனுபவம் தருகின்றனர் படத்தொகுப்பாளர்கள் ஆடம் மற்றும் பிலிப்ஸ்.
படத்தின் நீளம் குறைவாக இருந்தாலும், தேவையில்லாத காட்சிகளில் படத்தின் வேகம் குறையும் இடங்களிலும் படத்தொகுப்பாளர்கள் மேஜிக் காட்டியிருக்கலாம்.

அனிமேஷன் கதாபாத்திரங்களை லைவ் ஆக்ஷன் உலகத்துடன் இணைத்த கிராபிக்ஸ் நுட்பத்தில் பெரிய பிரச்னைகள் ஏதுமில்லை.
ஆனால், சில இடங்களில் க்ரீன் மேட் காட்சிகளை இன்னும் பக்குவமாகக் கையாண்டிருக்கலாம். இப்படியான விஷயங்கள் படத்தின் 3டி அனுபவத்திற்குத் தடையாக உள்ளன.
லைவ் ஆக்ஷன் கதாபாத்திரங்களைத் தாண்டி, படத்தின் முக்கியக் காட்சிகளில் வரும் அனிமேஷன் கதாபாத்திரங்களை, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் டீன் ஃப்ளெய்ஷர் கேம்ப்.
பலருக்கும் பரிச்சயமான அனிமேஷன் கதாபாத்திரங்களாக இருந்தாலும், சமகால ட்ரெண்டிற்கேற்ப விஷயங்களை மெருகேற்றி இணைத்தது பாராட்டத்தக்கது!
அன்பும் அரவணைப்பும் ஒருவனை எப்படி நல்வழியில் மாற்றும் என, பீல்-குட் டிராமாவாக கதையை விரித்திருப்பது அழகு! அந்த மெசேஜையும் துருத்தலின்றி, குழந்தைகளுக்குப் புரியும் வகையில் எளிமையாகக் கையாண்டிருக்கின்றனர்.

ஆனால், கதை இணையும் புள்ளி, பல அனிமேஷன் படங்களில் இடம்பெற்றிருந்த க்ளிஷேதனமாக இதிலும் தொடர்ந்திருக்கிறது.
இது சற்று சோர்வை உண்டாக்குகிறது. இதைத் தொடர்ந்து, இன்னும் சலிப்பைத் தரும் க்ரிஞ்சான பழைய அனிமேஷன் விஷயங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
அறிவியல் சார்ந்த விஷயங்களை மிகவும் மேம்போக்காகத் தொட்டுச் சென்றிருக்கின்றனர். இது சயின்ஸ் பிக்ஷன் என்ற ஜானருக்கு நியாயம் சேர்க்கத் தவறுகிறது.
சின்ன சின்ன பிரச்னைகள் இருந்தாலும், கோடைக் கால விடுமுறையில் வரும் விருந்தாளிகளாக லிலோவும் ஸ்டிச்சும் குழந்தைகளின் மனதில் நிச்சயம் தங்கிவிடுவர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…