
விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி, ரன்பீர் கபூரின் அனிமல் போன்ற படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இவரின் அடுத்தப்படம் “ஸ்பிரிட்” . இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிகை தீபிகா படுகோனிடம் பேசப்பட்டு அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் தீபிகா படுகோன் இந்தப் படத்திலிருந்து விலகினார். தற்போது அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதற்கிடையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தன் எக்ஸ் பக்கத்தில், “நான் ஒரு நடிகரிடம் ஒரு கதையைச் சொல்லும்போது, அவர்மீது 100% நம்பிக்கை வைக்கிறேன். அந்த நடிகருக்கும் எனக்கும் ஒரு சொல்லப்படாத NDA (வெளிப்படுத்தாத ஒப்பந்தம்) உள்ளது. ஆனால் (கதையின் சிலப் பகுதிகளை வெளியில் கூறியதன் மூலம்) நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளீர்கள்… இளம் நடிகையை வீழ்த்துவதற்காக என் கதையை வெளியே கூறினீர்களா? இதுதான் உங்கள் பெண்ணியத்தின் அடையாளமா?
ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, நான் பல வருட கடின உழைப்பை எனக்கு பின்னால் வைத்திருக்கிறேன். எனக்கு திரைப்படத் தயாரிப்புதான் எல்லாமே. ஆனால் உங்களுக்கு அது கிடைக்கவுமில்லை. எப்போதும் அது கிடைக்காது. அடுத்தமுறையும் இதேப்போல செய்யுங்கள்… வேண்டுமானால் முழு கதையையும் சொல்லுங்கள்… எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.” எனக் குறிப்பிட்டு அதற்கு கீழே “பூனை தூணைக் கீறுகிறது” என்ற இந்தப் பழமொழி மிகவும் பிடிக்கும்.” என எழுதியிருக்கிறார்.
தற்போது இந்த விவகாரம், பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.