• May 27, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: உடல் எடையைக் குறைப்பவர்கள் சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிக்கிறார்கள். வேறு சிலரோ நெய்யை முழுமையாகத் தவிர்க்கிறார்கள். நெய் நல்லதா, கெட்டதா? அந்தக் காலத்தில் நெய் காய்ச்சும்போது அதில் முருங்கைக்கீரை சேர்த்து பொரித்துக் கொடுப்பார்கள். அது இந்தக் காலத்துக்கும் ஏற்றதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகளையும் ‘க்ருதம்’ என்ற பெயரில் நெய்யில் தயாரித்துக் கொடுப்பது வழக்கம். காரணம், நெய்யின் வழியே கொடுக்கும்போது அந்த மருந்தின் கிரகிப்புத்தன்மை சிறப்பாக இருக்கும். அதே சமயம், ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது நெய்க்கும் பொருந்தும்.

நாம் உண்ணும் உணவானது எப்படி உட்கிரகிக்கப்படுகிறது, பிறகு அது எப்படி செரிக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். வைட்டமின்கள், மினரல்கள், குறிப்பாக கொழுப்பில் கரையும் மினரல்கள் போன்றவை கொழுப்புச்சத்து இருந்தால்தான் உடலுக்குள் சிறப்பாக உட்கிரகிக்கப்படும்.  ஐபிஎஸ் எனப்படும் ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’, அஜீரண பிரச்னை, வயிற்றுவலி உள்ளிட்ட குடல் ஆரோக்கியம் தொடர்பான  பிரச்னைகளுடன் இன்று நிறைய பேர் அவதிப்படுவதைப் பார்க்கிறோம்.  அவர்கள் நெய்யில் சமைத்துச் சாப்பிடும்போது இந்தப் பிரச்னைகள் கட்டுப்படுவதை உணரலாம்.

வெயிட்லாஸ் முயற்சியில் இருப்போரும் நெய் எடுத்துக்கொள்ளலாம். அது கொழுப்பு என்றாலும், எடைக்குறைப்புக்கு உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 மில்லி நெய்யை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அதில் வெறும் 45 கலோரிகள்தான் இருக்கும். நெய்யை முழுவதும் தவிர்ப்பது தேவையற்றது.

வாய்ப்பிருப்பவர்கள், நெய்யில் வறுத்த முருங்கைக்கீரையை தினமும் சிறிது எடுத்துக்கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சும்போது கடைசியாக அது நுரைத்துவரும்போது சிறிது முருங்கை இலைகளைச் சேர்ப்பார்கள். அது படபடவென வெடிக்கும்.  அதைக் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார்கள். சுவையும் பிரமாதமாக இருக்கும். முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது. முருங்கைக்கீரை சூப், முருங்கைக்கீரை பவுடர், கேப்ஸ்யூல் என அது பல வடிவங்களில் வருகிறது. அதையே நெய்யோடு எடுத்துக்கொள்ளும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

8 மாதக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தினமும் சிறிது நெய் எடுத்துக்கொள்ளலாம். வாய்ப்பிருப்பவர்கள், நெய்யில் வறுத்த முருங்கைக்கீரையை தினமும் சிறிது எடுத்துக்கொள்ளலாம். அது கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கண்களுக்கு ஓய்வில்லாமல் உழைப்பவர்களுக்கு பார்வை நரம்புகளை வலுப்படுத்த இது உதவும். பார்வை தொடர்பான பிரச்னைகளையும் தவிர்க்கும். 

நெய்

முருங்கைக்கீரை சேர்த்துக் காய்ச்சிய நெய்யை தினமும் ஒன்றிரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். வெயிட்லாஸ் முயற்சியில் இருப்பவர்கள், தினமும் இதை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

முருங்கைக்கீரை சேர்த்துக் காய்ச்சிய நெய், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குழந்தையின்மை பிரச்னையையும் சரியாக்கும். அடிக்கடி களைப்பாகிறவர்கள், எனர்ஜியே இல்லாமல் உணர்கிறவர்களுக்கும் இது மிகச் சிறந்தது. சருமத்தின் பளபளப்புக்கும் உதவும். ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதால், தினமும் இதை எடுத்துக்கொள்வதால் இளமைத் தோற்றம் தக்கவைக்கப்படும்.  ‘வெண்ணெய் காய்ச்சவெல்லாம் யாருக்கு இன்று நேரமிருக்கிறது… அதில் முருங்கைக்கீரை நெய் வேறா…’ என்று சிலர் கேட்கலாம். முருங்கைக்கீரை இன்ஃபியூஸ்டு நெய் ரெடிமேடாகவும் கிடைக்கிறது. நேரமில்லாதவர்கள் தரமான தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *