
‘மின் கட்டண உயர்வு’ – அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் கடந்த வார பரபர செய்தி இது.
வரும் ஜூலை மாதம் முதல், மின் கட்டணம் 3.16 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று தகவல் தீயாய் பரவ, ‘என்னது மறுபடியுமா?’ என்ற மோடில் மக்கள் ஷாக் ஆகி நின்றனர்.
அவர்களுக்கு கொஞ்சம் ஆசுவாசம் கொடுக்கும் விதமாக, கடந்த 20-ம் தேதி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், “சில நாள்களாக, மின் கட்டண உயர்வு குறித்து ஆதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. இப்போதைக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வு குறித்து எந்தவித ஆணையையும் பிறப்பிக்கவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ‘மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பான ஆணையை வழங்கும்போதும், அதை நடைமுறைப்படுத்தும் போதும், வீட்டு நுகர்வு மின்சாரத்திற்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைவருக்கும் வழங்கப்படும் இலவச மின்சார சலுகை தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்” என்று கூறினார்.
ஆக, அவரது பேச்சில் இருந்து இந்த ஆண்டு வீட்டுப் பயன்பாடு மின்சாரத்திற்கு கட்டண உயர்வு எதுவும் இருக்காது என்று தெரிகிறது. இருந்தும், இன்னமும் மின்சார வாரியத்தின் நஷ்டம் சரியாகவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.
ஏன் மின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுகிறது?
2022-ம் ஆண்டுக்கு முன்பு, 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
மின் கட்டண உயர்வு இல்லாமல், தொடர்ந்து அதிக விலைக்கு மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்கி வந்ததாலும் தமிழ்நாடு மின்சார வாரியம் 2022-ம் ஆண்டு ரூ.1.59 லட்சம் கோடி கடனில் தத்தளித்து கொண்டிருந்தது.
இதனால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை (TNERC) நாடியது தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO).
2026 – 27 நிதியாண்டு வரை, தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் உயர்த்திக் கொள்ளலாம். இந்தக் கட்டண உயர்வு, ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் பணவீக்க விகிதம் மற்றும் 6 விழுக்காடு ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்தலாம் என்று உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது தமிழ்நாடு அரசு.
மத்திய அரசு தான் காரணம்
அத்தனை வாக்குறுதிகளைக் கொடுத்து… ஆட்சிக்கட்டில் ஏறிய திமுக, பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே (2022) மின் கட்டணத்தை உயர்த்தி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த அதிருப்திகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் தமிழ்நாடு மின் வாரியத்தின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்.
அதில் மின் வாரியத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில், மின் வாரியம் முற்றிலும் சீரழிக்கப்பட்டு, இழுத்து மூடும் நிலையில் இருந்தது.

அதிமுக ஆட்சியினால் மின் வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனிலும், ஆண்டுக்கு ரூ.16,511 கோடி வட்டியும் செலுத்தும் நிலையில் இருந்தது. அரசு மானியமாக கடந்த ஆண்டு (2021) ரூ.9,000 கோடியை வழங்கி, மின் வாரியத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டார். இந்த ஆண்டும் (2022) ரூ.3,000 கோடி வழங்கி உள்ளார்.
இருந்தாலும், மத்திய அரசு, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அரசின் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மின் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை அனுப்பி வந்தது… அழுத்தத்தையும் தந்தது.
மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் நிலைமையை ஓரளவு சமாளிக்கலாம் என்று தான் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று பேசியிருந்தார்.
அதன் பின்னர்…
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், 2022-23, 2023-24, 2024-25 நிதியாண்டுகளில் மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் இந்த ஆண்டும், கடந்த நிதியாண்டின் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப, 3.16 சதவிகிதம் மின் கட்டணம் ஏற்றப்படும் என்ற தகவல் சமீபத்தில் கசிந்தது.
இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கிளப்பியது.
ராமதாஸ் பதிவு!
மின் கட்டண உயர்வு தகவல் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்…
“தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு மாயை தான்.
மின்கட்டணம் உயர்த்தப்படாததால் தான் மின்சார வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதோ, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதோ உண்மையல்ல. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வரவு செலவு கணக்கு குறித்த புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன.

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும்.
அதற்கு முன் மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது.
2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும்.
எனவே, ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மின்சார வாரியத்திற்கு இன்னும் ஏன் நஷ்டம் தீர்ந்தபாடில்லை?’ என்பதை விளக்குகிறார் தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பை சேர்ந்த காந்தி.

“2022-ம் ஆண்டுக்கு முன்பு வந்த மின் கட்டணம் அனைத்தும் ஓராண்டு மின் கட்டண உயர்வாகத் தான் வந்தது. ஆனால், 2022-ம் ஆண்டு வந்தது ‘5 ஆண்டுகால மின் கட்டண உயர்வு’ ஆகும். இந்தக் கட்டணம் ஒவ்வொரு ஆண்டின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையில் உயர்த்தப்படும்.
இந்தக் கட்டண உயர்வில் மின் கட்டணம் மட்டுமல்ல. மின் வாரிய அட்டையில் பெயர் மாற்றுவது தொடங்கி மின்சாரம் சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் இந்தக் கட்டண உயர்வு இருக்கும்.
இந்த ஆண்டுக்கு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்படும். இதில் வீட்டு மற்றும் விவசாய மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்கிவிடும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்ற அனைத்திற்கும் மின் கட்டணம் எந்த மானியமும் இல்லாமல் உயர்த்தப்படும்.
2022-ம் ஆண்டு கட்டண உயர்விற்கு முன்பு, மின்சார வாரியத்தின் வருவாய் கிட்டத்தட்ட ரூ.46 ஆயிரம் கோடி. அப்போது சராசரி மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.5.60 ஆகும். அந்த சமயத்தில் மின்சார வாரியத்தின் நஷ்டம் என்று ரூ.24,500 கோடி என்று கூறப்பட்டது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைப்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணம் ஏற்றப்பட்டது. அந்த ஏழு மாதத்தில் மின்சார வாரியத்தின் வருமானம் சுமார் ரூ.60,000 கோடி. அப்போதும் மின்சார வாரியத்தின் கடன் என்று ரூ.26,500 கோடி என்று கூறப்பட்டது. அந்த ஏழு மாதங்களில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.6.89 ஆக இருந்தது.
2024-ம் ஆண்டு நிதியாண்டில், மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு சராசரியாக ரூ.7.68 உயர்த்தப்பட்டது. ஆனால், அப்போது கூறப்பட்ட நஷ்டம் ரூ.24 ஆயிரம் கோடி.
ஆக, மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தி கொண்டு வந்தப்போது கூட, மின்சார வாரியத்தின் கடன் குறையவில்லை.
இன்னொரு பக்கம், ஒவ்வொரு ஆண்டும், மின்சார வாரியம் கிட்டத்தட்ட 500 கோடி யூனிட்டுகளை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இருந்தும், மின்சார வாரியத்தின் நஷ்டம் குறையவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு மின்துறை பொறியாளார் அமைப்பு சார்பாக தொடர்ந்து மின்சார வாரியத்திடம் புள்ளிவிவரத்தோடு கேள்வி எழுப்பி வருகிறோம். ஆனால், இப்போது வரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
மின்சார வாரியத்திற்கு மின் விற்பனை மட்டும் தான் தொழில் அல்ல. மின்சார வாரியத்திடம் இருக்கும் மின் கட்டமைப்புகளை தனியார் பயன்படுத்துவதை அனுமதிப்பது மூலமும் மின்சார வாரியம் சிறிதளவு சம்பாதிக்கிறது.
ஆனால், அந்தக் கட்டமைப்பில் தனியார் மின்சாரம் வருவதும், அதை கணக்கிடுவதிலும் தான் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. ஒரே கம்பியில் 15,000-க்கும் மேற்பட்ட தனியார் மின்சாரம் பாய்கிறது என்பது அதிர்ச்சி தகவல். இந்த முறைகேடு தான் மின்சார வாரியத்தின் நஷ்டம் குறையாமல் இருப்பதற்கு அடிப்படை காரணம். உயர்த்தப்படும் மின் கட்டணம் அனைத்தும், தனியார்கள் இந்தக் கட்டமைப்பை பயன்படுத்துவதன் மூலம் கொள்ளையடித்து வருகிறது.
தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கினால் கமிஷன் கிடைக்கும். இதனால் தான் மின்சார வாரியம், தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட ரூ.20,000 கோடி ஊழல் நடக்கும் ஒரே துறை மின்சாரத் துறை தான். இதற்கு மேலே சொன்ன புள்ளிவிவரங்களே சாட்சி.
2022-ம் ஆண்டு நிதியாண்டில், மின் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்ட ஏழு மாதங்களுக்கு மட்டும் மின்சார வாரியத்தின் வருமானம் கிட்டதட்ட ரூ.60,000 கோடி என்றால் பார்த்துகொள்ளுங்கள்!” என்கிறார்.