
சென்னை: துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 326 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து, தாழ்வாகப் பறந்து வந்தது. அப்போது, பரங்கிமலை பகுதியிலிருந்து பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, விமானம் தரையிறங்கும் போது இடையூறு செய்வது போல் லேசர் லைட் விமானத்தின் மீது அடிக்கப்படுவதாக புகார் செய்தார்.