
புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக, கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. அடுத்த நாளே பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.