
‘பஞ்சாப் வெற்றி!’
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடிக்க முக்கியமான இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வென்றிருக்கிறது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பிரியான்ஷ் ஆர்யாவும் ஜாஷ் இங்லீஸூம் அமைத்த ஒரு பார்ட்னர்ஷிப்தான் முக்கிய காரணமாக இருந்தது. பஞ்சாப் எப்படி வென்றது? மும்பை எங்கேயெல்லாம் சறுக்கியது?
‘போட்டியின் முக்கியத்துவம்!’
நான்கு அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்று விட்டாலும் இந்தப் போட்டியின் மீதும் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், இந்தப் போட்டியில் வெல்லும் அணியால் முதல் இரண்டு இடங்களுக்குள் செல்ல முடியும். அதன்மூலம் ப்ளே ஆப்ஸில் கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். இரு அணிகளும் அதற்காகவே இதை Do or Die போட்டி போல அணுகினர்.
‘டாஸ் பின்னணி!’
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்திருந்தார். இதற்கும் காரணம் இருந்தது. ஏனெனில், இதே ஜெய்ப்பூரில் பஞ்சாப் இந்த இடைவெளிக்குப் பிறகு இரண்டு போட்டிகளில் ஆடியிருக்கிறது. இரண்டிலும் முதலில் பேட்டிங் செய்திருந்தது. ஒன்றில் தோல்வி, இன்னொன்றில் நெருங்கி வந்து 10 ரன்கள் வித்தியாசத்திலேயே வென்றனர். இதனால்தான் சேஸிங் செய்யலாம் எனும் முடிவுக்கு ஸ்ரேயஸ் வந்தார்.

‘மும்பை பேட்டிங்!’
மும்பை அணி பேட்டிங்கை தொடங்கியது. மும்பையின் டார்கெட்டே 200 என்பதாக இருந்ததாகத்தான் தெரிகிறது. அதற்கேற்பதான் முதலில் இருந்தும் ஆடினார். யாராவது ஒரு வீரர் கடைசி வரை நின்று ஆட வேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தது. முதலில் ரோஹித் சர்மா அந்த ரோலை எடுத்து ஆட முயன்றார். ரிக்கல்டன் பவர்ப்ளேயில் அடித்து ஆடிய போதும் ரோஹித் விக்கெட்டை காத்து நின்றார். 27 ரன்களில் யான்சனின் பந்தில் ரிக்கல்டன் அவுட் ஆனார். அந்த முதல் விக்கெட் விழுந்த பிறகு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது.
நம்பர் 3 இல் சூர்யகுமார் யாதவ் இறங்கினார். சூர்யாவும் நின்று ஆடவே முயன்றார். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் சூர்யா நின்று ஆட கடைசி இரண்டு ஓவர்களில் நமன் தீருடன் இணைந்து 48 ரன்களை அடித்திருந்தார். மும்பை அணி எதிர்பார்த்ததை விட ஒரு 30 ரன்களை அதிகமாக எடுத்தது. அதையேதான் இங்கேயும் செய்ய நினைத்தனர். அந்தப் போட்டியை போல இங்கேயும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

ஹர்ப்ரீத் ப்ரார் வீசிய 10 வது ஓவரில் 24 ரன்களில் ரோஹித் அவுட். வைசாக் விஜயகுமார் வீசிய அடுத்த ஓவரிலேயே திலக் வர்மா காலி. வில் ஜாக்ஸூம் ஹர்திக் பாண்ட்யாவும் வந்த வேகத்தில் ஒன்றிரண்டு பவுண்டரிக்களை அடித்துவிட்டு அவுட் ஆகினர். சூர்யாவும் நமன் தீரும் கூட்டணி சேர்ந்தார்கள். இங்கேயும் கடைசி 2 ஓவர்கள்தான் டார்கெட். வைசாக் விஜயகுமார் வீசிய 19 வது ஓவரில் 23 ரன்களை அடித்திருந்தனர்.

‘நிறைவேறாத திட்டம்!’
நமன் தீர் இரண்டு சிக்சர்கள். சூர்யா இரண்டு பவுண்டரிக்கள். கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவர் எதிர்பார்த்த மாதிரியாக செல்லவில்லை. இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே வந்தது. சூர்யா, நமன் தீர் இருவருமே அவுட் ஆகினர். மும்பை அணியால் 184 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அவர்கள் நினைத்ததை விட 15-20 ரன்கள் குறைவு.
‘பஞ்சாப் சேஸிங்!’
பஞ்சாபுக்கு 185 ரன்கள் டார்கெட். பவர்ப்ளே வரைக்கும் போட்டியை ஓரளவுக்கு சமநிலையிலேயே வைத்திருந்தது மும்பை அணி. மும்பையின் பௌலர்களிடம் தெளிவான திட்டம் இருந்தது. ஸ்லோயர் ஒன்களாக மட்டுமே வீசினர். பிரப்சிம்ரனை நிற்க வைத்து ஸ்லோயர் ஒன்களாக வீசி மெய்டன் ஆக்கினார் தீபக் சஹார். அவரின் அடுத்த ஓவரில் பிரப்சிம்ரன் பவுண்டரிக்களை அடித்தார்.

ஆனால், அவருக்கு ஒரு எளிய கேட்ச்சை அஸ்வனி குமார் ட்ராப் செய்தார். இதுதான் சரியான சமயம் என பும்ராவை 5 வது ஓவரிலேயே அழைத்து வந்தார் ஹர்திக். பும்ராவும் ஸ்லோயர் ஒன்களாகவே வீசினார். 120 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட ஒரு பந்துக்கு பிரப்சிம்ரான் அரைகுறையாக ஷாட் ஆடி அதே அஸ்வனி குமாரிடமே கேட்ச் ஆனார். மும்பை அணி ஆட்டத்துக்குள் வருவதைப்போல தோன்றியது.
‘போட்டியை மாற்றிய பார்ட்னர்ஷிப்!’
இதன்பிறகுதான் ட்விஸ்ட்டே நடந்தது. நம்பர் 3 இல் வந்த ஜாஸ் இங்லிஸ் மும்பையின் பௌலர்களை புரட்டியெடுத்தார். 360* இல் ஷாட்களை ஆடினார். ஓவருக்கு ஓவர் பவுண்டரிக்களை அடித்துக் கொண்டே இருந்தார். ரன்ரேட் அழுத்தம் குறைய ஆரம்பித்தது. பிரியான்ஸ் ஆர்யாவும் சைலண்டாக இங்லிஸுக்கு ஒத்துழைத்துக்கொண்டே முன்னேறினார். கடந்த போட்டியின் மேட்ச் வின்னரான சாண்ட்னரால் கூட இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பும்ராதான் ஒரே வழியென அவருக்கு 10 மற்றும் 13 வது ஓவரை வழங்கி பார்த்தார். அதற்கும் பலனில்லை.

இருவரும் அரைசதத்தை கடந்தனர். இருவரும் இணைந்து 109 ரன்களை அடித்திருந்தனர். ஏறக்குறைய போட்டியை முடித்துவிட்டனர். இந்த சமயத்தில் சாண்ட்னரின் ஓவரில் பிரியான்ஸ் ஆர்யா 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகும் அழுத்தமெல்லாம் ஏறவில்லை.

இங்லிஷூடன் ஸ்ரேயஸ் சேர்ந்து கூலாக போட்டியை முன்னெடுத்து சென்றனர். ஒரே கட்டத்தில் இங்லிஸூம் சாண்ட்னரின் பந்தில் 73 ரன்களில் அவுட் ஆனார். ஆனாலும் கேப்டன் ஸ்ரேயாஸ் களத்தில் நின்றதால் அவர் பக்குவமாக ஆடி போட்டியை முடித்துக் கொடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி முதல் இரண்டு இடங்களுக்குள் செல்வதை உறுதி செய்திருக்கிறது. பஞ்சாப் அணியின் பயணத்தில் புதிய வரலாற்றை எழுத ஸ்ரேயஸ் & கோ தயாராகிவிட்டது.