
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகில் உள்ள பிவாண்டியில் இருக்கும் பிலாஞ்ஜே என்ற பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த 14 வயது சிறுமி திருமணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளார். இக்கிராமத்திற்கு எப்போதும் இல்லாத வகையில் புதிதாக திடீரென மூன்று கார்கள் வந்தது. சிறிது நேரத்தில் அக்காரில் பெண்ணை ஏற்றிக்கொண்டு அதிலிருந்தவர்கள் கிளம்பினர். இதனை கவனித்த உள்ளூர் பெரியவர்கள் சிலர் காரை வழிமறித்து நிறுத்தினர். காருக்குள் பார்த்தபோது உள்ளே 14 வயது மைனர் பெண் மணக்கோலத்தில் இருந்தார். அவருடன் 35 வயது மணமகன் மங்கேஷ் மாலையணிந்தபடி இருந்தார். உடனே அவர்கள் இருவரையும் கிராமத்தினர் காரில் இருந்து கீழே இறக்கினர். திருமணத்திற்கான எந்த வித சடங்கும் செய்யாமல், மேளதாளம் இல்லாமல் வெறுமனே மாலை அணிவித்து தாலி கட்டி மைனர் பெண்ணை அவரது பெற்றோர் விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் பாட்டீல் கூறுகையில், ”மைனர் பெண்ணின் தாயார் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அவரது தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சிறுமி பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர். மைனர் பெண்ணின் வளர்ப்பு தாயிக்கு இடைத்தரகர் சஞ்சய் லட்சுமண் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மைனர் பெண்ணை வளர்ப்பு தாயார் ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இடைத்தரகர் லட்சுமண் தான் பெண்ணின் குடும்பத்தாரிடம் பணத்தாசை காட்டி சிறுமியை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தெரிந்து கொண்டு இடைத்தரகர் லட்சுமண் மற்றும் வளர்ப்புத்தாய் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். போலீஸார் இது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து மைனர் சிறுமியின் சகோதரி கூறுகையில்,”எனது சகோதரி இன்னும் உடைந்த பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால் அவளை எனது பெற்றோர் அகமத் நகரை சேர்ந்த 35 வயது நபருக்கு ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டனர். எனது தந்தை பணத்தை எண்ணிக்கொண்டிருந்தபோது எனது சகோதரியை காரில் அழைத்துச்சென்றனர். அதிர்ஷ்டவசமாக காப்பாற்றிவிட்டனர்” என்றார். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு மட்டும் 1000க்கும் மேற்பட்ட மைனர் சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
போலீஸார் மூன்று காரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது பாதி வழியில் தப்பிச்செல்ல முயன்றனர். கார்களை விரட்டிச்சென்று மடக்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தப்பிச்சென்ற கார்களை மடக்கி பிடிக்க உதவி செய்த ஜெயகாந்த் பாட்டீல் இது குறித்து கூறுகையில்,” கார்களை மடக்கி பிடித்தபோது அதில் இருந்தவர்கள் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கும்போது நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என்று கேட்டனர். காரில் இருந்த மாப்பிள்ளை நாங்கள் ஓடிப்போகவில்லை. முறைப்படி திருமணம் செய்து கொண்டுதான் போகிறோம் என்று தெரிவித்தார்” என்றார்.
மணமகனின் வீட்டார் கிராமத்தினருக்கும் லஞ்சம் கொடுத்து பிரச்னையை சமாளிக்க பார்த்தனர். ஆனால் கிராமத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை. மைனர் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவீந்திரா இது குறித்து கூறுகையில்,” மூன்று கார்களில் வந்த 12 பேர் மைனர் சிறுமியை கட்டாயபடுத்தி அருகில் உள்ள லட்சுமண் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து பெண்ணை காரில் ஏற்றினர். நான் உடனே கிராமத்தினரை உஷார்படுத்தினேன்” என்றார். மணமகனிடம் போலீஸார் பெண்ணை ஏன் விலைக்கு வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, “நாங்கள் மிகவும் ஏழை. எங்களுக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். எனவேதான் விலைகொடுத்து பெண்ணை வாங்கினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.