
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், அர்ஜுன், அரவிந்த் சுவாமி, துளசி நாயர் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். ரகுமான் நடிப்பில் 2013-ல் வெளியான திரைப்படம் கடல்.
இப்படத்தின் கதை மற்றும் வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார்.
மேலும், திரைக்கதையிலும் மணிரத்னத்துடன் பங்காற்றினார். இந்த நிலையில், கடல் படத்தின் கதையை நாவலாக விரிவாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.
இந்த நாவல் உருவாக்கம் குறித்து ஜெயமோகன் தனது வலைதளப் பக்கத்தில், “நான் கடல் கதையை மணி ரத்னம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாவலாகவே எழுதினேன்.
என் எல்லா நாவல்களையும்போல அது அடிப்படையான ஒரு கேள்வியில் இருந்து வெடித்துக் கிளைபிரிந்து வளர்ந்து சென்ற ஒரு படைப்பு. அதை அவரும் நானும் திரைக்கதையாக்கினோம்.
அவர் அதை இயக்கினார். நாவலில் இருந்து ஒரு காட்சியை வாசித்தேன். சாம் கிராமத்தாரால் சிறைக்கு அனுப்பப்படும் காட்சி. அது ஒரு சிலுவையேற்றம்தான்.
அதில் காட்டிக்கொடுக்கும் யூதாஸ்தான் செலினா. நாவலில் அது ஓர் உணர்ச்சிகரமான நினைவுகூரல், அல்லது நாடகீயத் தன்னுரை.
அந்தக் காட்சியின் திரைக்கதை வடிவம் ஒரு காட்சிச் சித்தரிப்பு. ஆனால் அது சினிமாவில் பல உள்ளோட்டங்கள் கொண்டது.
அந்த தேவாலயம், அதன் படிக்கட்டுகளினூடாக சாம் மேலேறுவது. அங்கிருந்த முகங்கள். ஒரு மேலைச் செவ்வியல் ஓவியத்திற்குரிய ஒளிப்பதிவு.
அனைத்திற்கும் மேலாக செலினா பொன்னொளியில் தேவதையாக கட்டப்பட்டிருந்தாள். திரைக்கதையில் இல்லாமல் இயக்குநர் காட்சி வழியாக உருவாக்கிய கூடுதல் அர்த்தம் அது.
அவள் யூதாஸ் அல்ல மக்தலீனாதான் என்று அவர் காட்சி வழியாக அடிக்கோடிட்டிருந்தார். சினிமா என்னும் textஇன் subtext அது.(உண்மையில் சினிமாக் கல்வி என்பது இவற்றை எல்லாம் அடையாளம் காணக் கற்றுக்கொள்வதுதான்).
நீண்ட இடைவெளிக்குப்பின் கடல் சினிமாவின் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வணிகரீதியாகத் தோல்வியடைந்த சினிமாவை அதில் பணியாற்றிய எல்லாரும் மறக்க விரும்புகிறார்கள். நானும்தான்.

கடல் நாவலின் விரிவை சினிமா சுருக்கமாகவே முன்வைக்க முடிந்தது. கிறிஸ்தவத் தொன்மவியலில் அறிமுகமே அற்ற தமிழ் ரசிகர்களால் அதை உள்வாங்க முடியவில்லை.
காதல் – வில்லன் என்ற அளவிலேயே எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இன்று கடல் சினிமாவை மிக விரும்பிக் கொண்டாடும் ஒரு சிறு இளைய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
ஆகவே கடல் நாவலை நூலாக வெளியிட்டாலென்ன என்னும் எண்ணம் உருவானது. பல கணிப்பொறிகள் மாறியதனால் நாவல் என்னிடம் இல்லை.
மணி ரத்னத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களில்தான் இருந்தது. பல வடிவங்களில் மாற்றங்களுடன். அவற்றைத் தொகுத்து நாவலை முழுமையாக்கினேன். இப்போது வெளிவருகிறது. இது வேறொரு அனுபவம்.
நாவல் என்பது மிகப்பெரிய பேசுதளம் கொண்டது. அதில் ஏராளமான சினிமாக்கள் அடங்கியுள்ளன.
விரிந்து விரிந்து செல்லும் அதன் கதைப்பின்னல். உணர்ச்சிகளின் நேரடி வெளிப்பாடான எண்ணங்கள், தன்னுரைகள், உரையாடல்கள். பிரம்மாண்டமான காட்சிப்பரப்புகள்.

இது பாவம்- மீட்பு என்னும் மகத்தான மானுட நாடகத்தின் சித்தரிப்பு. சினிமாவாக வெளிவந்த ஒரு படைப்பு பத்தாண்டுகளுக்குப் பின் நாவலாக வருவதென்பது மிக அரிதாகவே நிகழ்வது.
தமிழில் முன்னுதாரணம் ஏதுமில்லை. சினிமா நாவல் என்னும் இரு கலைகளைப் புரிந்துகொள்ள இது உதவலாம்.
இரு கலைகளின் வழியாக மானுடனின் அழியாத துயரையும், என்றுமுள்ள மீட்பையும் உணரவும் உதவும் என நினைக்கிறேன்.” என்று எழுதியிருக்கிறார்.