
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியின் 6-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பாபு (வயது 36). இவர், அரக்கோணம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் லாட்ஜ் நடத்திகொண்டு ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதாக அரக்கோணம் நகரப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரக்கோணம் காமராஜர் நகரில் உள்ள கவுன்சிலர் பாபு வீட்டுக்கு சென்ற போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய அனுமதியின்றி வைத்திருந்த 2 கைத்துப்பாக்கிகளும், தோட்டாக்களும் சிக்கின.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், கவுன்சிலர் பாபுவையும் கைது செய்தனர்.
விசாரணையில், அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் வெல்டிங் கடை நடத்திவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (36) என்பவரிடம் இருந்துதான் கவுன்சிலர் பாபு துப்பாக்கிகளை வாங்கியதாக தெரியவந்தது. இதையடுத்து, தினேஷ்குமாரையும் கைது செய்த போலீஸார், இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கவுன்சிலர் பாபு உள்ளிட்ட 4 பேர் லாட்ஜில் இருந்தபோது, திடீரென உள்ளே புகுந்த மர்ம கும்பல் அவர்களை தாக்கிவிட்டுத் தப்பியதும் குறிப்பிடத்தக்கது. எனவே, பதிலடி கொடுப்பதற்காக கள்ளத்துப்பாக்கிகளை வாங்கினாரா கவுன்சிலர் பாபு? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.