
விஜய் ஆண்டனி அடுத்தடுத்த பட லைன் அப்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். அப்படி விஜய் ஆண்டனியின் அடுத்த வெளியீடு ‘மார்கன்’.
இப்படம் அடுத்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய் ஆண்டனியுடன் சமுத்திரக்கனி, பிரிகிடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசுகையில், “தொடர்ந்து நான் படங்களைத் தயாரிப்பதைப் பார்த்து, என்னிடம் அதிகப் பணம் இருப்பதாக நினைத்துவிடாதீர்கள்.
எல்லாமே கடன்தான், அதற்கு மாதம் மாதம் வட்டியும் உண்டு. இந்தப் படத்தின் இயக்குநர் லியோவை எனக்கு ‘பிச்சைக்காரன்’ படத்தின் எடிட்டிங் சமயத்தில் இருந்தே தெரியும். நான் செய்த தவறை அவர் செய்யக் கூடாது.
நான் நடிக்க வந்த பிறகு இசையமைப்பதை நிறுத்திவிட்டேன். நீங்கள் படம் இயக்கினாலும், உங்களுடைய இயக்குநர்களுடன் இணைந்து எடிட்டிங் செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் சிறப்பான நிகழ்வுகள் சில இருக்கும்.
அந்த வகையில் ‘டிஷ்யூம்’ படத்தின் மூலமாக இயக்குநர் சசி சார் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலமாக என்னை கதாநாயகனாக நிறுத்தினார். இப்போது மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறேன்.

நான் மதம் சாராத ஒரு நபர். ஜாதி, மதம் உலகத்தில் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். நான் பார்க்கும் அனைத்திலும் ஒரு நல்ல விஷயமும், எல்லா மனிதர்களிடமும் ஒரு ஆற்றல் இருப்பதாக நம்புபவன்.
எல்லோருடைய நம்பிக்கைகளையும் நான் மதிப்பேன். ‘பிச்சைக்காரன்’, ‘சலீம்’ படங்களில் ஆன்மீக அம்சங்கள் தானாகவே வந்துவிட்டன.
இப்போது என்னுடைய அடுத்த படங்களுக்கு நானே இசையமைக்கிறேன். இதைத் தாண்டி, மற்ற கதாநாயகர்களின் படங்களுக்கும் நான் இசையமைக்கவிருக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களைத்தான் தயாரித்தேன்.
இந்த வருடத்தில் என்னுடைய பொருளாதார நிலைமையைப் பார்த்து, மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பேன்.” என்றார்.