• May 26, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலத்தின் சீரோ மலபார் சபையின் கீழ் உள்ள ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். இவர் மீது கோட்டயம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் 2018-ல் ஒரு புகார் அளித்தார். அதில், குருவிலங்காடு மடத்தில் வைத்து 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் பிராங்கோ முளய்க்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறியிருந்தார். கன்னியாஸ்திரிகள் வசிக்கும் மடத்தில் பார்வையாளராகச் சென்ற பிஷப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது குருவிலங்காடு காவல் நிலையத்தில் கன்னியாஸ்திரி புகார் அளித்தார். ஆரம்பத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, சபை தலைமைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி சக கன்னியாஸ்திரிகள் தெருவில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டத்தில் முன்னிலையில் நின்றவர் கன்னியாஸ்திரி அனுபமா. இதனால் அனுபமா உள்ளிட்ட சில கன்னியாஸ்திரிகளை சபை நிர்வாகம் இடம் மாற்றம் செய்தது. ஆனாலும், போராட்டம் தீவிரமானதை அடுத்து  பிஷப் பிராங்கோ முளய்க்கல் சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. அந்த வழக்கின்பேரில் 2018 செப்டம்பர் 21-ம் தேதி பிஷப் பிராங்கோ முளய்க்கல் கைதுசெய்யப்பட்டர். பிஷப்புக்கு எதிராக பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர் வாக்குமூலம் அளித்திருந்தார். அவர் 2018-ம் வருடம்  மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முன்னாள் பிஷப் பிராங்கோ முளய்க்கல்

இந்த வழக்கில் கன்னியாஸ்திரிகள் உள்பட நூறுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்த்தப்பட்டது. மேலும் 105 நாட்கள் ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டது. கோட்டயம் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வெளியானது. அதில், பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீதான குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாகக் கூறியதுடன், பிஷப் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அரசு தரப்பில் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு மே மாதம் தனது பிஷப் பதவியை ராஜிநாமா செய்தார் பிராங்கோ முளய்க்கல். பிராங்கோ முளய்க்கல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கன்னியாஸ்திரிகள் வலியுறுத்தி வந்தனர்.

அனுபமா தலைமையில் கன்னியாஸ்திரிகள் நடத்திய போராட்டம்

இந்த நிலையில், கன்னியாஸ்திரிகளின் போராட்டங்களுக்கு தலைமை வகித்த கன்னியாஸ்திரி அனுபமா சபையில் இருந்து வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கோட்டயம் குருவிலங்காட்டில் செயல்பட்டுவரும் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வெளியேறிய கன்னியாஸ்திரி அனுபமா, ஆலப்புழா பள்ளிப்புறத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பி உள்ளார். எம்.எஸ்.டபிள்யூ படித்துள்ள அனுபமா பள்ளிப்புறம் இன்போ பார்க்கில் உள்ள ஐ.டி கம்பெனியில் டேட்டா எண்ட்ரி வேலைக்கு சேர்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இது பற்றி அனுபமா நேரடியாக எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *