
கண்டமனூர்: தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வனப்பகுதியில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆறு, அணைகளுக்கான நீர்வரத்தும் உயரத் தொடங்கி உள்ளன.
தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்னதாகவே தொடங்கி உள்ளதால் தமிழக கேரள எல்லையில் கடந்த சிலநாட்களாக அதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி விநாடிக்கு 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து கனமழையினால் படிப்படியாக அதிகரித்து நேற்று (மே 25) 584 கனஅடியாக உயர்ந்தது.