
‘சென்னையின் பெர்பெக்ட் வெற்றி!’
சென்னை சீசனை வெற்றியோடு முடித்திருக்கிறது. குஜராத்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் சென்னை பெற்றிருக்கும் வெற்றியை ‘Perfect Victory’ எனக் கூறியிருக்கிறார் தோனி. இந்த சீசன் முழுக்க சென்னை அணி இப்படி ஒரு வெற்றியையும் கூட்டுச் செயல்பாட்டையும்தான் தேடி அலைந்துகொண்டே இருந்தது.
நிறைய சீனியர்கள் வீரர்கள் இந்த சீசனில் சொதப்பியிருந்தாலும், சில இளம் வீரர்கள் நம்பிக்கைக் கீற்றாக கலக்கியிருக்கின்றனர். தோனி சொன்ன ‘Perfect’ வெற்றிக்கும் அவர்கள்தான் காரணமாக இருந்தனர். இவர்களையெல்லாம் அடுத்தடுத்த சீசன்களில் தவறவே விடக்கூடாது எனும் வகையில் சிறப்பாக ஆடியிருக்கும் சில இளம் சிங்கங்களைப் பற்றி இங்கே.
ஆயுஷ் மாத்ரே:
சீசனின் நடுப்பகுதி அது. சென்னை அணி ஆயுஷ் மாத்ரே என்கிற வீரரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்போகிறது என ஒரு தகவல். போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியிடம் அதைப் பற்றி கேள்வி கேட்க, சென்னை அணியின் மீடியா மேனேஜர் இடைமறித்து அப்படியெல்லாம் யாரையும் நாங்கள் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை.

இது இயல்பாக வருடா வருடம் நடக்கக்கூடிய ப்ராசஸ்தான். நாங்கள் இன்னும் 2-3 வீரர்களை கூட ட்ரையல்ஸூக்கு அழைத்திருந்தோம். நீங்கள் அவர்களின் பெயரையும் சேர்த்து கேட்டிருக்கலாம்.’ என்றார். ஆயுஷ் மாத்ரேவை ஒப்பந்தம் செய்யலாமா வேண்டாமா என முடிவெடுக்காத காலக்கட்டத்தில் வந்த பதில் இது. ஒருவேளை ஆயுஷ் மாத்ரேவை சென்னை அணி ஒப்பந்தம் செய்யாமல் போயிருந்தால் அது மாபெரும் தவறாக மாறியிருக்கும்.

நல்ல வேளையாக அப்படி செய்யவில்லை. சென்னை அணியின் ஓப்பனிங் கூட்டணிதான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக எப்போதும் இருக்கும். ஆனால், இந்த சீசனில் ருத்துராஜ் தன்னை நம்பர் 3 க்கு இறக்கிக்கொண்டார். அவருக்குப் பதில் ஓப்பனிங் வந்த வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரே காயமடைந்து வெளியேறவும் செய்தார். அந்தக் கட்டத்தில்தான் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளே வந்தார் ஆயுஷ் மாத்ரே. 7 போட்டிகளில் 240 ரன்களை அடித்திருக்கிறார். இதில் ஒரு அரைசதமும் அடக்கம். இதில் கவனிக்க வேண்டியது ஆயுஷ் மாத்ரேவின் இண்டண்ட்தான்.

ஆயுஷ் வரும் வரைக்கும் சிக்சர்களே இல்லாமல் இருந்த சென்னை அணியின் பவர்ப்ளே, ஆயுஷ் வந்த பிறகு சரவெடியாக மாறியது. மற்ற வீரர்களிடம் இல்லாத இண்டண்ட் இவரிடம் இருந்தது. ஸ்ட்ரைக் ரேட் 188. அடுத்த சீசனில் ருத்துராஜோடு ஆயுஷ் இறங்கினால் அது மிகப்பொருத்தமான ஓப்பனிங் கூட்டணியாக இருக்கும். ஆயுஷூக்கு 17 வயதுதான். அவரை வருங்காலத்துக்கான ஆப்சனாகவும் பார்க்க முடியும். ஆக, அவரை அப்படியே கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் சிஎஸ்கே.
டெவால்ட் ப்ரெவிஸ்:
நடப்பு சீசனின் பிற்பாதியில் உள்ளே வந்து சென்னை அணியின் அதிரடி சூறாவளியாக மாறிவர் டெவால்ட் ப்ரெவிஸ். கடந்த 2-3 சீசன்களாக சென்னை அணி மிடில் ஓவர்களில் சிவம் துபேவை அதிகமாக நம்பியிருந்தது. அவரும் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். ஆனால், இந்த சீசனில் துபே அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக நல்ல ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடவில்லை.

அந்தக் குறையை டெவால்ட் ப்ரெவிஸ்தான் நீக்கினார். 6 போட்டிகளில் 225 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 180. ஓப்பனிங்கில் கிடைக்கும் மொமண்டமை அப்படியே வாங்கி அதிரடியாக ஆடி நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் செல்வதுதான் ப்ரெவிஸின் வேலை. அதை சரியாகவும் செய்திருக்கிறார். ஆக, அடுத்த சீசனில் நம்பர் 4-5 இந்த இடத்துக்கான நல்ல ஆப்சனாக இருப்பார்.
உர்வில் படேல்:
இவர் கடைசியாகத்தான் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், நம்பர் 3 இல் சென்னை அணி தவறிவிட்ட அந்த அதிரடி பேட்டருக்கான இடத்தை கச்சிதமாக நிரப்பினார். ஓப்பனிங் பேட்டர்களுக்கும் மிடில் ஆர்டருக்கும் இடையே தொய்வற்ற கண்ணியாக இருக்க வேண்டியதுதான் நம்பர் 3 பேட்டருக்கான பணி. அதை தன்னால் செய்ய முடியும் என்பதற்கான அறிகுறியை உர்வில் படேல் காண்பித்து விட்டார். 3 போட்டிகளில் 68 ரன்களை எடுத்திருந்தார்.

ஸ்ட்ரைக் ரேட் 212. ஓப்பனிங்கில் ஆயுஷ் மாத்ரே, நம்பர் 3 இல் உர்வில் படேல், நம்பர் 4/5 இல் டெவால்ட் ப்ரெவிஸ் என்று இருந்தால் இண்டண்ட்டுக்கும் அதிரடிக்கும் பஞ்சமில்லாத பேட்டிங் ஆர்டராக சென்னையின் பேட்டிங் ஆர்டர் இருக்கும்.
நூர் அஹமது:
ஏலத்தின் போது நூர் அஹமதுவை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டியது. 5 கோடி வரை கேட்டது. அந்த சமயத்தில் குஜராத் உள்ளே புகுந்து RTM கார்டை பயன்படுத்தும். ப்ளெம்மிங் தயக்கமே இல்லாமல் அப்படியே இரட்டிப்பாக 10 கோடி கொடுத்து வாங்குவதாக சொல்ல, குஜராத் பின் வாங்கியது. சென்னை அணி ஏலத்தில் எடுத்த வீரர்களில், அணியின் நம்பிக்கையை முழுமையாகக் காப்பாற்றியவர் நூர் அஹமதுதான்.

14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். சென்னை அணிக்காக இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கும் வீரர் நூர் அஹமதுதான். அதிலும் மற்ற இரண்டு ஸ்பின்னர்களான அஷ்வினும் ஜடேஜாவும் சோபிக்காத போது நூர் அஹமது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக வீசி ஸ்ட்ரைக்கிங் பௌலராக செயல்பட்டார். அவர் மீது முதலீடு செய்யப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் நியாயம் செய்திருக்கிறார்.
கலீல் அஹமது:
சென்னை அணிக்கு எப்போதுமே இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு கண் உண்டு. சில ஏலங்களில் ஜெயதேவ் உனத்கட்டுக்கே 10 கோடிக்கு மேலெல்லாம் சென்று முயன்று பார்த்திருக்கிறார்கள். அந்த எண்ணத்தில்தான் கலீல் அஹமதுவையும் அணிக்குள் கொண்டு வந்தார்கள். 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்

பவர்ப்ளேயில் சிறப்பாக வீசி எதிரணியின் தொடக்க விக்கெட்டுகளௌ வீழ்த்திக் கொடுத்து அசத்தியிருந்தார். அடுத்த சீசனில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டால் அபாயகரமான ஸ்ட்ரைக்கிங் பௌலராக இருப்பார்.
அன்ஷூல் கம்போஜ்:
அன்ஷூல் கம்போஜ் சிறப்பாக வீசுகிறார். அவர் அவ்வளவு வேகமாக வீசுவதைப் போல தெரியவில்லை. ஆனால், பந்து மேலே வந்து மோதுகிறது என அன்ஷூல் கம்போஜ் குறித்து தோனி புகழ்ந்து பேசினார். 8 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குஜராத்துக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் பவர்ப்ளேயில் நன்றாக வீசியிருந்தார்.

ஆக, இன்னும் அடுத்த சீசனில் அவருக்கான வாய்ப்பும் வெளியும் கிடைக்கும்பட்சத்தில் சிறப்பாக செயல்படக் கூடும் என நம்பலாம்.
மேலே குறிப்பிட்ட இந்த 6 வீரர்களின் சராசரி வயது 23. சென்னை அணி எதிர்பார்க்கும் ஆட்டமுறையும் இண்டட்டும் வாய்க்கப்பெற்ற வீரர்கள் இவர்கள். இவர்களை சென்னை அணி தவறவிட்டுவிடக்கூடாது. இதே போல உங்களின் சாய்ஸையும் கமென்ட்டில் தெரிவியுங்கள்!