
சென்னை: “கருணாநிதி விரும்பிய திட்டத்தை ஸ்டாலின் எதிர்ப்பது இப்போது விசித்திரமாக இருக்கிறது. நான் தமிழகத்தை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால், தமிழகம் என்னை ஒருபோதும் விட்டுவிடாது” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக பாஜக இன்று நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், "நான் தமிழகத்தில்தான் வளர்ந்தேன். நான் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் தமிழகம் என்னை ஒருபோதும் விட்டுவிடவில்லை. தமிழகம் என் மீது ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. தமிழ்நாடு திருவள்ளுவர், சித்தர்கள், முருகன், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ஆயிரக்கணக்கான கோயில்களின் பூமி. இது எம்ஜிஆர் வாழ்ந்த பூமி, ஜல்லிக்கட்டு பூமி. தமிழ்நாட்டின் அனுபவம் என்னை வழிநடத்தி வருகிறது.