
தனியார் பள்ளிகளும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இடங்களை (25%) பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமெனக் கொண்டு வரப்பட்டதுதான் கட்டாய ஆரம்பக் கல்விச் சட்டம் 2009 (The Right of Children to Free and Compulsory Education Act, 2009).
2010-ம் ஆண்டு அமலுக்கு வந்த இந்தச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தச் சட்டத்தின் கீழ் தேர்வாகும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் செலுத்தும்.
ஒவ்வொரு வருடமும் மே மாத இறுதிக்குள் இந்த இடங்களுக்கான சேர்க்கை முடிவடைந்து விடுகிற சூழலில், இந்தாண்டு இப்போது வரை அட்மிஷன் தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.
மாநில பள்ளிக் கல்வித்துறைதான் இதற்கான அறிவிப்பை வெளியிடும். இந்தாண்டு இந்தச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளைச் சேர்ககலாமெனக் காத்திருந்த பெற்றோர்கள் அரசின் இ-சேவை மையங்களுக்குச் சென்று இது தொடர்பாகக் கேட்டிருக்கின்றனர். அங்கு அவர்களுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.
இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர், ‘எங்க பக்கத்து வீட்டுல ஒரு குழந்தை இந்தச் சட்டத்தின் கீழ் மூணு வருஷமா படிச்சுட்டு வருது. அந்தக் குழந்தையின் பெற்றோர் மூலமே இந்த திட்டம் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். இ சேவை மையங்கள்ல இது குறித்த விளக்கம் கிடைக்கும்னு அவங்க சொன்னாங்க. போய்க் கேட்டதுக்கு ‘எங்களுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரலை’ங்கிறாங்க. ஒருசிலர் இந்த வருடம் இந்தச் சட்டத்தின் கீழ் பிள்ளைகளைச் சேர்க்கறது இருக்காதுனும் சொல்றாங்க. அரசுதான் இதுல நிலவுகிற குழப்பத்தை சரி செஞ்சு எங்க வீட்டுக் குழந்தைகள் படிக்க நடவடிக்கை எடுக்கணும்’ என்கிறார்.
பயனுள்ள ஒரு சட்டம்
“பயனுள்ள ஒரு சட்டம். லட்சக்கணக்கான பிள்ளைகள் வருஷக் கணக்கா இதனால பயன் பெற்று வந்தாங்க. இந்த வருஷம்தான் பிரச்னைனு சொல்றாங்க. விசாரிச்சா, மத்திய மாநில அரசுகளின் மோதல் போக்குதான் காரணம்னு தெரியவருது.
அதாவது இந்தச் சட்டத்தின்படி, பள்ளிகளில் சேர்கிற பசங்களின் கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளும் பங்கிட்டுக் கட்டிட்டு வர்றாங்களாம். இந்தச் சூழல்ல இப்ப மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏத்துக்காததால் மத்திய அரசு தன் பங்கீட்டைச் செலுத்த மறுக்கிறதா சொல்றாங்க.

இது தொடர்பா பொதுநல வழக்கு ஒண்ணும் தாக்கலாகி நடந்திட்டுருக்கிறது. அந்த வழக்கு விசாரணையின் போதுதான் அரசுகளின் தரப்பில் நீதிமன்றத்துல தத்தம் கருத்துகளை எடுத்து வச்சிருக்காங்க. தமிழ்நாடு அரசு மத்திய அரசு நிதி தரலைனு சொல்ல, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்காததன் விளைவு இதுனு சொல்லியிருக்காங்க.
வழக்கு இன்னும் போயிட்டுதான் இருக்கு. பள்ளிகள் திறக்க இன்னும் ஒருவாரமே இருக்கிற சூழல்ல நீதிமன்றம்தான் இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிஞ்சுகிட்ட நல்லவொரு தீர்வு கிடைக்க வழி காட்டணும்” என்கின்றனர் கல்வியாளர்கள் சிலர்.
சில தனியார் பள்ளிகளில் நாம் இது குறித்துக் கேட்டோம்.
”பள்ளிக் கல்வித் துறைதான் நடவடிக்கை எடுக்கணும். நாங்க தன்னிச்சையா எதுவும் செய்ய முடியாதே” என்கிறார்கள்.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் இந்தாண்டு தாமதமாவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஐ முடக்கி வைக்கும் வகையில் அடாவடியாக ஒன்றிய அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டத்தின் பெயரில் ‘கட்டாயக் கல்வி’ என வைத்து விட்டு கட்டணத்தை ‘நீ கட்டு நான் கட்டு’ எனச் சண்டை பிடித்துக் கொண்டிருப்பது அரசுகளுக்கு அழகல்ல. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய விஷயம் இது. எனவே நல்லவொரு முடிவு விரைந்து எட்டப்பட வேண்டுமென்பதே அனைவரது எத்ரிபார்ப்பும்..!