
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023-ம் ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அப்போது முதல் இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அது நாளுக்குநாள் அதிகரித்தது. இதற்கிடையில், பொருளாதாரம், நிர்வாகம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்குப் பிறகு கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். தொடர்ந்து, இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்தை கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.
கனடாவின் முதல் இந்து வெளியுறவுத்துறை அமைச்சர் என்றப் பெருமையுடன் இந்தியா – கனடாவின் உறவில் உள்ள விரிசலை சரிசெய்ய முயன்றுவருகிறார் அனிதா ஆனந்த்.
அதன் அடிப்படையில், நேற்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், கனட வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தும் தொலைபேசியின் மூலம் பேசிக்கொண்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் எக்ஸ் பக்கத்தில், “கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் உடனான தொலைபேசி உரையாடலைப் பாராட்டுகிறேன். இந்தியா-கனடா உறவுகளின் வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். அவரது பதவிக்காலம் மிகவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.