
சென்னை புதுவண்ணாரப்பேட்டை எம்.பி.டி பள்ளி அருகே உள்ள பிளாட்பாரத்தில் வசித்தவர் ஜான் பாஷா (39). இவர் கடந்த 23.5.2025-ம் தேதி மயங்கிய நிலையில் கிடப்பதாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவ ஊழியர்கள் அங்கு வந்து ஜான் பாஷாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து ஜான் பாஷாவின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்த நிலையில் ஜான் பாஷாவின் சடலத்தை பிரேத பரசோதனை செய்த டாக்டர்கள், அவரின் கழுத்து, உடலில் சில இடங்களில் உள்காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதனால் ஜான் பாஷா, இயற்கையாக மரணம் அடையவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால் ஜான் பாஷா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் கூறுகையில், “பிளாட்பாரத்தில் வசித்து வந்த ஜான் பாஷா, கடந்த 22-ம் தேதி நள்ளிரவில் மது அருந்தியிருக்கிறார். போதையிலிருந்த ஜான் பாஷாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை மலாய்க்கா என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் திருநங்கை மலாய்க்கா அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகு அதிகாலையில் ஜான் பாஷா படுத்திருந்த பிளாட்பாரத்துக்கு மலாய்க்கா வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த திருநங்கை மலாய்க்கா, கைகளால் ஜான்பாஷாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார். அதன் காரணமாக அவர் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி திருநங்கை மலாய்க்காவை கைது செய்தோம். அவரிடமிருந்து செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு “திருநங்கை மலாய்க்கா உள்பட சில திருநங்கைகள் ஜான் பாஷா படுத்து உறங்கும் பிளாட்பார பகுதிக்கு அடிக்கடி நள்ளிரவில் வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று திருநங்கை மலாய்க்கா, அங்கு வந்திருக்கிறார். அப்போது போதையிலிருந்த ஜான் பாஷாவின் பையில் பணம் இருந்திருக்கிறது. அதைப்பார்த்ததும் ஜாலியாக இருக்கலாம் என ஜான் பாஷாவை திருநங்கை மலாய்க்கா அழைத்ததாகத் தெரிகிறது. அதில் ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார்.