
UPSC சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வில், பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் சேர்க்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில தலைவரான கரூரைச் சேர்ந்த ஆ.மலைக்கொழுந்தனிடம் பேசினோம். “இந்திய அரசின் உயர் பதவிகளான இந்திய ஆட்சிப் பணிக்கு ஐ.ஏ.எஸ், இந்திய காவல் பணி, ஐ.பி.எஸ் போன்ற பல்வேறு பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு மே 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடத்தியது.
`வன்மையாகக் கண்டிக்கிறது’
காலை 9:30 மணிக்கு ஒரு தேர்வு, மதியம் 1:30 மணியளவில் ஒரு தேர்வு என இரண்டு தேர்வுகளாக இந்தத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்வாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில், `who among the following was the founder of the self respect movement?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இதற்குக் கொடுக்கப்பட்ட விடையாக ‘Periyar E.V. Ramaswamy Naicker ‘ என்று தந்தை பெரியாரின் பெயரை சாதியுடன் சேர்த்துக் குறிப்பிட்டு உள்ளதை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று குறிப்பிட்டு இருந்தால் தான் அது சரியான முறையாக இருக்கும். கடந்த 1929 – ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாடு பெண்கள் உரிமைகள் சார்ந்தும், சாதி ஒழிப்பு சார்ந்தும், இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தான், தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் இருக்கும் சாதி மத அடையாளங்களைத் துறந்தார்கள்.
அதோடு, இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானம் இயற்றியது. பலரும் மாநாட்டுப் பந்தலிலேயே தங்களது சாதிப் பெயர்களைத் துறந்தனர் என்பது திராவிட இயக்க வரலாற்று பதிவாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தங்களது பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்களைத் துறந்தவர்களின் பெயர்ப் பட்டியலை தந்தை பெரியார் ‘குடி அரசு’ இதழில் வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார்.
சமத்துவத்திற்கு எதிரானது
நீண்ட போராட்டம் எதுவும் இல்லாமல், அரசாணைகள் எதுவும் இல்லாமல் சாதிப் பெயரைப் பெயருக்குப் பின்னால் சேர்க்கக்கூடாது என்ற சாதனையை, சத்தம் இல்லாமல் சாதித்த சுயமரியாதை இயக்கம் தான், தந்தை பெரியார் நடத்திய இயக்கம். இந்த நவீன காலத்தில் கூட, வட நாட்டில் முற்போக்கு பேசுகின்ற கட்சித் தலைவர்களின் பெயருக்குப் பின்னால் கூட இன்றும் சாதி இருக்கிறது. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18-ல் நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் தான் பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 16 என்றும், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளிக்கூட ஆசிரியர்களாக பெண்களையே அதிக அளவில் நியமிக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் நலன் சார்ந்தும் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டதும், பின்னால் வந்த அரசுகள் அதை நடைமுறைப்படுத்தியதும் தான் வரலாறு.
சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடான, செங்கல்பட்டு மாநாடு நடைபெறுவதற்கு முன்பே தந்தை பெரியார், அவர் பெயருக்கு பின்னால் சாதி சேர்ப்பதை நிறுத்திவிட்டார். கடந்த 25.12.1927-க்குப் பிறகு வெளிவந்த ‘குடி அரசு’ பத்திரிகையிலும் அதன் ஆசிரியர் என ஈ.வெ.ராமசாமி என்றே குறிப்பிட்டு உள்ளதை அறிவோம். நவீன காலத்தில் சாதி ஒழிப்பை நகர்த்திச் செல்லும் இந்தக் காலத்தில், சாதி ஒழிப்பிற்காகத் தன் வாழ்வின் இறுதி வரை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் போராடிய தந்தை பெரியாரையே சாதிப் பெயர் தாங்கி, இந்தியாவின் உயரிய அதிகாரிகளை உருவாக்குகின்ற அமைப்பு நிலைநிறுத்துவது என்பது சமத்துவத்திற்கு எதிரானது.

சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, சாதியை பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, தந்தை பெரியார் நடத்திய அரசியலமைப்பு சட்ட எரிப்புப் போராட்டம் என்பது உலக வரலாற்றில் யாரும் நடத்தி இருக்க முடியாத, எதிர்காலத்திலும் நடத்த இயலாத ஒரு வரலாற்றுப் போராட்டம். சாதிக்கு எதிராக வரலாற்றுப் போராட்டங்களை நடத்திய ஒரு தலைவரை சாதி சார்ந்து குறிப்பிடுவது என்பது ஏற்புடையது அல்ல. இந்தச் செயலை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டிக்கிறது. தந்தை பெரியாரின் பெயரை எந்தப் பாடத்திட்டத்தில் பயன்படுத்தினாலும், எங்கு பயன்படுத்தினாலும் அவர் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பதையும் கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.