
இன்றைய விலைவாசியில் வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதனால், அதற்குள்ள நல்ல ஆப்ஷன் ‘வீட்டுக் கடன்’.
ஆனால், கடன் வாங்கி வீடு வாங்கலாமா… வேண்டாமா என்ற கேள்வி ஊசலாட்டமாக நம் மண்டையில் ஓடி கொண்டிருக்கும். அதற்கு பதிலளிக்கும் விதமாக, கடன் வாங்கி வீடு வாங்கும்போது உள்ள பிளஸ்களை பார்க்கலாம். வாங்க…
இன்று பலரும் இ.எம்.ஐ-யில் பொருட்களை வாங்கி தள்ளிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வீடு என்பது அப்படி அல்ல. எதிர்காலத்தில் மதிப்பு ஏறக்கூடியது. அதனால், தாராளமாக கடன் வாங்கி வீடு வாங்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள் சிலர்.
வீட்டுக் கடன் குறித்த நிறைய விமர்சனங்கள் இருக்கவே செய்கிறது. அதனை எதுவும் மறுப்பதற்கல்ல. ஆனால், அதனையும் தாண்டி, வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவதிலும் சில பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கவே செய்கிறது.
நீண்ட கால அடிப்படையில் வீடு என்பது ஃபிக்ஸட் டெபாசிட்டை விட அதிக வருமானத்தை கொடுக்கும். இது ஒரு சில சூழல்களில் தான். ஆனால், வீட்டின் அமைவிடத்தை பொறுத்து இன்னும் கூட அதிக வளர்ச்சியை எட்டலாம்.
‘வட்டி கட்ட வேண்டுமே’ என்று நினைக்க வேண்டாம். மாதா மாதம் வாடகை கட்டப் போகிறீர்கள். அதற்கு பதில், இ.எம்.ஐ கட்டினால் உங்களுக்கு ஒரு வீடு சொந்தம் ஆகுமே… அப்படி யோசியுங்கள்!
நாம் கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்து வாங்கும்போது, செங்கல், சிமென்ட், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையும் ஏறிவிடும். அப்போது நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் தாண்டி உங்கள் வீட்டுக்கு ஆகும் செல்வு அதிகரிக்கலாம். அதைக் கூட்டி கழித்து பார்த்தால், இப்போதே கடன் வாங்கி வீடு வாங்குவது நல்லதாக கூட இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இன்னும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வீட்டுக் கடன் வாங்குவதற்கு சரியான நேரம் தான் இது என்கிறார்கள் நிபுணர்கள்.
வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு வருமான வரிச் சலுகைகளும் உண்டு. பழைய வருமான வரிப்படி, திரும்பக் கட்டும் அசலில் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு 80 C பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை தரப்படுகிறது. மேலும், வீட்டுக் கடன் வட்டிக்கு நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் 24 (B) பிரிவின்கீழ் வரிச் சலுகை கிடைக்கும். ஆக மொத்தம், ரூ.3.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை கிடைக்கும். கடன் வாங்கி வீடு கட்டலாமா என நினைப்பவர்கள் தங்களின் முடிவுகளை எடுக்கும் போது இதனையும் மனதில் வைத்து எடுக்கலாம்.