
எத்தனையோ கட்டப் பேச்சுவார்த்தைகள், எத்தனையோ முயற்சிகளுக்கு பிறகும், இன்னும் ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில், ரஷ்யா விமானப் பாதுகாப்புப் பிரிவின் தளபதி யூரி டாஷ்கின், ரஷ்ய செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “கடந்த மே 20-ம் தேதி, உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலின் நடுவில் ரஷ்ய அதிபர் புதின் ஹெலிகாப்டர் சிக்கி கொண்டது.
உக்ரைன் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வது, அதிபரின் ஹெலிகாப்டரை பாதுகாப்பது என ஒரே நேரத்தில் இரண்டு பணிகளையும் மேற்கொண்டோம்.
அதிபரின் ஹெலிகாப்டர் சரியாக டிரோன் தாக்குதலின் மையத்தில் சிக்கி கொண்டது. ஆனால், அதிபர் புதினை பாதுகாத்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து உக்ரைன் தரப்பு, “இது புனையப்பட்ட கதையாக இருக்கலாம். அதிபரின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றால் ரஷ்ய மக்களிடையே ஆதரவு அதிகரிக்கும்” என்ற எண்ணத்தில் ரஷ்யா இப்படி ஒரு பொய்யுரையைப் பரப்புகிறது என்று கூறுகிறார்கள்.
ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் ஒப்பந்தங்களை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.