• May 26, 2025
  • NewsEditor
  • 0

கடின உழைப்புதான் என்றைக்கும் கைகொடுக்கும் என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிராவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் தான் நினைத்து பார்க்க முடியாத ஒரு இடத்தில் வேலையில் சேர வேண்டும் என்று நினைத்து கடின உழைப்பால் அதனை சாதித்து காட்டி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் இருக்கும் கெய்ர்போதி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தாஸ் ஹேம்ராஜ். இவரது தந்தை அரசு பள்ளியில் பியூனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ராம்தாஸ் மிகவும் கடினமாக படித்து 12வது வகுப்பு வரை முடித்தார். ஆனால் அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிக்க அவரிடம் பணம் இல்லை. இதனால் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி பி.ஏ தேர்ச்சி பெற்றார். அதோடு மட்டுமல்லாது தள்ளுவண்டியில் பகல் நேரத்தில் வியாபாரம் செய்தார்.

தெருக்களில் பானிபூரி விற்பனை செய்து கொண்டே படித்தார். இஸ்ரோவில் வேலைக்கு சேர வேண்டும் என்பது ராம்தாஸ் கனவாக இருந்தது. இதற்காக அருகில் உள்ள ஐ.டி.ஐ யில் சேர்ந்து பம்ப் ஆபரேட்டர் மற்றும் மெக்கானிக் படிப்பை படித்து முடித்தார். அடிக்கடி இஸ்ரோவில் வேலைக்கான அறிவிப்பு வருகிறதா என்பதையும் கவனித்துக்கொண்டே இருந்தார். 2023ம் ஆண்டு இஸ்ரோ நிர்வாகம் பயிற்சியாளர் வேலைக்கு ஆள்தேவை எனக் கூறி விளம்பரம் செய்தது. உடனே ராம்தாஸ் அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். இதற்கு நாக்பூரில் எழுத்துத்தேர்வு நடந்தது. இத்தேர்வில் வெற்றிகரமாக ராம்தாஸ் தேர்ச்சி பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் திறன் ஆய்வு சோதனைக்காக ராம்தாஸ் அழைக்கப்பட்டார். இந்த டெஸ்டிலும் ராம்தாஸ் தேர்ச்சி பெற்றார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோவில் பம்ப் ஆபரேட்டர் வேலைக்கு ராம்தாஸ் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் ராம்தாஸ் தனது புதிய வேலையில் சேர்ந்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் இப்போது அவர் பணியில் சேர்ந்துள்ளார். அவரை அவரது கிராம மக்கள் வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *