• May 26, 2025
  • NewsEditor
  • 0

மத்திய பா.ஜ.க அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல். இதை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூரில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் ஜனசேனா கட்சித் தலைவரும் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஒரே நாடு..ஒரே தேர்தல்!

இந்த கருத்தரங்கில் பேசிய அவர், “நான் தமிழ்நாட்டை விட்டுச் சென்று 30 வருடங்கள் ஆகிறது. தமிழ்நாடு என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் ஆழமானது. அதனால் தமிழ்நாட்டின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. எனக்குப் பிடித்த எம்.ஜி.ஆர், வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு, எனக்குப் பிடித்த தமிழ் கடவுள் முருகன் இருக்கும் பூமி இது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பலத் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. தேர்தலில் வெற்றிப்பெற்றால் இவிஎம் மிஷின் சூப்பர் என்பார்கள். தோற்றால் இவிஎம் மிஷின் கரெப்ட் ஆகியிருக்கிறது என்பார்கள்.

இரட்டை வேஷம் போடுகிறார்கள்

அதேப்போலத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்திலும் இரட்டை வேஷம் போடுகிறார்கள். அவர்கள் ஆட்சியில் இது கொண்டுவரப்பட்டபோது நல்லது. இப்போது அது கெட்டது.

இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் புதிதல்ல. 1952 – 1967 வரை சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என முன்மொழிந்தது அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி. அவர்தான் இதைக் கொண்டுவரவேண்டும் என விரும்பினார்.

கலைஞர் கருணாநிதி

இது கலைஞரின் கனவு, அவரின் சிந்தனை

இப்போது அவர் கட்சிக்காரர்களே அதை எதிர்க்கிறார்கள். இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை படிக்க வேண்டும்.

அதில் ஒரே நேரத்தில் சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது கலைஞரின் கனவு, அவரின் சிந்தனை. அதுதான் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பாவின் கனவு நிறைவேறக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார்.

கடந்த 20 வருடங்களாக தேர்தல் தொடர்ந்து வருவதால் அரசும், நிர்வாகமும் சோர்வடைகிறது. அதற்கான செலவு, ஆள் பலம், உழைப்பு எனப் பெரிதாக செலவாகிறது. அதனால் நாட்டின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கிறது.

அடுத்தடுத்து தேர்தல் வருவதால் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பிரசாரம் செய்துகொண்டிருக்க வேண்டிய சூழல், தேர்தலுக்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால், சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்ற சுழற்சி இருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதனால் தேர்தல் ஆணையமும் பெரிதாக சோர்வடைகிறது. எனவே, குறைவான பலத்தில் பெரிதான வேலையை செய்யும் திட்டம்தான் ஒரே நாடு ஒரே தேர்தல். அதைத்தான் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைத்திருக்கிறது.

இந்த முறை பின்பற்றப்பட்டால் இந்தியாவின் ஜிடிபி-யும் அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தலில் ஒரே அரசையே மக்கள் தேர்வு செய்யும் கட்டாயம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஒடிசா அரசியலை எடுத்துக்கொள்ளுங்கள்.

2019-ல் மாநிலத்தில் நவீன் பட்நாயக் கட்சியும், மத்தியில் பா.ஜ.க-வும் வெற்றிப்பெற்றது. 2024-ல் இரண்டிலும் பா.ஜ.க வென்றிருக்கிறது. எனவே மக்களுக்கு தெரியும். நாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

ஒரே நாடு ஒரேத் தேர்தல் விவகாரத்தில் உங்கள் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும். எதாவது பிரச்னை இருந்தால் அமர்ந்து பேசி விவாதிக்கலாம். ஒரே நாடு ஒரேத் தேர்தல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் அவசியமானது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *