
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடையவிருக்கிறது. அதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பதவிகளைப் பிடிக்க, கட்சிகளுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம், கட்சிக்குள் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
ஜூன் 19..!
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூன் மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், ஜூன் மாதம் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 9-ம் தேதிக்குள் அனைத்து கட்சிகளும் இதில் முடிவெடுத்தாக வேண்டும் என்பதால் அனல் தகிக்கிறது தமிழக அரசியல் களம்.
2019, ஜூலை 25-ம் தேதி, தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் மாநிலங்களவை எம்.பி-க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில், வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர். அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அந்தக் கட்சியின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களின் இடத்துக்கு தான் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து ஒருவர் மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதன்படி பார்த்தால், 159 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தி.மு.க கூட்டணிக்கு நான்கு எம்.பி இடங்கள் தாராளமாகக் கிடைக்கும். அதன்படி, வில்சன், அப்துல்லா இருவருமே மீண்டும் எம்.பி-யாகத் தேர்வாகக் காய்நகர்த்துகிறார்கள்.
வைகோவா… கமலா…?
தன்னுடைய தீவிரமான ஆதரவாளர் என்பதால், அப்துல்லாவுக்கு உதயநிதி ஸ்டாலின் சப்போர்ட் செய்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, ‘ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவை சீட் கொடுக்கப்படும்’ என்று மட்டும் தான் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன்படிதான், திருச்சி தொகுதி, வைகோவின் மகன் துரை வைகோவுக்கு ஒதுக்கப்பட்டது. வைகோவிடம் இருக்கும் மாநிலங்களவை எம்.பி சீட்டை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்குக் கொடுக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது

ஆனால், தங்களிடமிருக்கும் ஒரு சீட்டை விட்டுத்தர வைகோ தரப்பு தயாராக இல்லை. முன்னதாக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ம.தி.மு.க பொருளாளர் செந்திலதிபன், ‘கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை சீட் தருவதாக தி.மு.க தெரிவித்தது. எனவே, நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்’ என வெளிப்படையாகவே போட்டு உடைத்திருக்கிறார். எனினும் வைகோ இடத்தை கமலுக்கு கொடுக்க தான் திமுக தரப்பு விரும்புவதாக தெரிகிறது.
அதேபோல, தி.மு.க வசமுள்ள ஒரு இடம் வழக்கமாக தொ.மு.ச-வுக்கு ஒதுக்கப்படும். அதன்படி, இந்த முறை தொ.மு.ச பொருளாளர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்.
அதிமுக கூட்டணியில் போட்டா போட்டி!
அ.தி.மு.க-வுக்குச் சட்டப்பேரவையில் 66 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்களில், ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் மாற்று அணியாகச் செயல்படுகின்றனர். இவர்களில், உசிலம்பட்டி ஐயப்பன் கட்சியிலிருந்து நீக்கப்படாததால், அ.தி.மு.க கொறடாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். ஆக, எடப்பாடி பழனிசாமி வசமிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் 63 பேர்தான்.
இதனால் ஒரு சீட்டை மட்டுமே அ.தி.மு.க எளிதாக நிரப்பிக்கொள்ள முடியும். மற்றொரு சீட்டை நிரப்புவதற்கு ஓ.பி.எஸ், பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கிற நிலை. இதில் பாஜக மட்டும் தற்போது கூட்டணியில் இணைந்திருக்கிறது. அவர்களின் 4 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு கிடைத்தால், அதிமுக ஆதரவு எண்ணிக்கை 67 ஆக உயரும். இரண்டாவது எம்.பி-யை பெற எடப்பாடி தரப்புக்கு இன்னும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு வேண்டும் என்ற நிலை. இதனை ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் இருந்து பெறுவாரா அல்லது பாமக ஆதரவை பெறுவாரா என்பது தான் கேள்வி.
பாமக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அந்த ஒரு இடத்தை அவர்களுக்கு கேட்பார்கள். எடப்பாடி பழனிசாமியின் ஆதாரவாளருக்கு பன்னீர் ஆதரவு அளிப்பது சந்தேகம். பாஜக பன்னீர் தரப்பிடம் பேசினாலும், பாஜக வேட்பாளராக இருந்தால் ஆதரவளிப்பார். ஆனால் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது சந்தேகம்.
இப்படியான நிலையில் எளிதாக இருக்கும் ஒரு சீட்டை பிடிப்பதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறதாம். மற்றொரு இடம், யாருக்கு என்பது இறுதி வரை இழுபறி நீடிக்கும் என்றே தெரிகிறது. எடப்பாடி தற்போது வரை இரு இடங்களையும் அதிமுகவுக்கு பெறுவதில் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இப்படி திமுக, அதிமுக என இரு தரப்பிலும் கடும் போட்டி நிலவுவதால் இம்முறை மாநிலங்களவை தேர்தலால் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது.!