
டெல்லியில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக கூட்டணியில் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய மோடி, முக்கியமாக, ஆபரேஷன் சிந்தூர் குறித்து முன் தயாரிப்பு இல்லாமல் எந்தக் கருத்தையும் பேசாதீர்கள் என்றும், தேவையில்லாமல் எதைக் குறித்துமே கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கி உள்ளார்.
அமைச்சர் விஜய் ஷா
மத்திய பிரதேசம் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சர் விஜய் ஷா. அவர் சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியிருந்தார். அதில் கர்னல் சோபியா குரேஷியை “பாகிஸ்தானின் சகோதரியை வைத்தே பதிலடி நடத்தி உள்ளோம்” என்று பேசினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்ப, உச்ச நீதிமன்றம் இவரது பேச்சைக் கடுமையாகக் கண்டித்தது.
எம்.பி ராம் சந்தர் ஜங்கரா
பாஜகவின் ராஜ்யசபா எம்.பி ராம் சந்தர் ஜங்ரா பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து பேசும்போது…
“பஹல்காமில் கணவனை இழந்த பெண்களுக்கு போர் குணம் இருக்கவில்லை. அங்கே இறந்தவர்களின் கை கட்டுப்பட்டு இருந்ததால், தீவிரவாதிகள் அவர்களை விட்டு வைக்கவில்லை. இறந்தவர்களுக்கு கைகள் கட்டுப்போட்டு இருந்தது. அவர்கள் (அக்னிவீர்) திட்டத்தில், பயிற்சி பெற்றிருந்தால், அந்த 26 பேரை தீவிரவாதிகள் கொன்றிருக்க மாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
இதுவும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த மாதிரி தேவையில்லாத கருத்துகளை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என்று தான் மோடி நேற்று நடந்த சந்திப்பில் அறிவுறுத்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.