• May 26, 2025
  • NewsEditor
  • 0

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காஸாவின் இரண்டாம் பெரிய நகரமான கான் யூனிஸிலுள்ள டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குடும்பம் கிட்டத்தட்ட முழுமையாக கொல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் அலா அல்- நஜ்ஜார் தனது பத்து குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு, கடந்த வெள்ளியன்று, உயிர்காக்கும் சேவையை செய்ய தெற்கு காஸாவில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றிருந்தார்.

அவ்வேளையில், டாக்டரது வீட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. சில மணி நேரத்தில், டாக்டரின் சொந்த குழந்தைகள் ஏழு பேரின் உடல்கள் மோசமாய் எரிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

Gaza

சொல்ல முடியாத துயரம்

சனிக்கிழமை நிலவரப்படி, இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த 7 மாதக் குழந்தை மற்றும் 2 வயதுக் குழந்தை என டாக்டரின் மேலும் இரண்டு குழந்தைகளது உடல்கள் மீட்கப்பட்டன.

“இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், டாக்டரருடைய பத்து குழந்தைகளில் ஒன்பது குழந்தைகளான சித்தார், லுக்மான், சாடின், ரெவல், ருஸ்லான், ஜுப்ரான், ஈவ், ரக்கன் மற்றும் யாஹ்யா உயிரிழந்தனர்.

டாக்டரின் கணவர் மற்றும் ஒரு குழந்தை காயங்களோடு உயிர்தப்பினர். நஜ்ஜாரின் கணவருக்கு மண்டை ஓட்டின் எலும்பில் முறிவு ஏற்பட்டது . மேலும் மார்பு, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் இப்போது நாசர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Gaza

டாக்டர் தம்பதியினரின் உயிரோடு இருக்கும் ஒரே மகனான 11 வயது ஆடம், பலத்த காயங்களோடு தற்போது தாயுடன் மிதமான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். தந்தை மற்றும் மகனுக்கு இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

`தாய் அதிர்ச்சியில் இருக்கிறாள்’

“இஸ்ரேலின் இந்த தாக்குதல் நம்பமுடியாத ஒன்று. தாக்குதல் குறித்து கேள்விப்பட்டபோது, அல்-நஜ்ஜார் அடைந்த அதிர்ச்சியை நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாது.

உலகெங்கும் உள்ள மக்கள் பாதிக்கப்படும் மனிதகுலத்தின் பக்கமிருக்க வேண்டும். குண்டுவெடிப்புக்கு எதிராகப் பேச வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு குரல் இல்லை. குழந்தைகளின் தாய் அதிர்ச்சியில் இருக்கிறாள். தயவுசெய்து, உலகில் உள்ள அனைவரும் தாயுடைய குரலாக இருக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார் நாசர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவப் பிரிவின் தலைவரான அஹ்மத் அல்-ஃபர்ரா.

Gaza

தெற்கு காஸாவிலுள்ள கான் யூனிஸின் சுற்றுப்புறத்திலிருக்கும் டாக்டரது வீட்டை இலக்காக வைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது என காஸா சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்களன்று, காஸாவிலுள்ள கான் யூனிஸில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கட்டாய வெளியேற்ற உத்தரவுகளையும் இஸ்ரேல் பிறப்பித்தது. இப்பகுதியில் தினமும் கடுமையான, கொடிய குண்டுவெடிப்பு நடந்து வருகிறது.

வெள்ளி மற்றும் சனியன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல்-நஜ்ஜார் குழந்தைகள் உட்பட மேலும் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 79 பேரின் உடல்கள், வெள்ளி முதல் சனிக்கிழமை நண்பகல் வரை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2023 முதல் தற்போது வரை, காசாவில் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 53,901 என்றும், 122,593 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *