
நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் அவரின் கணவர் கணேஷ்கரும் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பிறந்தநாள் வாழ்த்து பெற்றனர்.
இதுகுறித்து ஆர்த்தியிடம் பேசினோம்.
‘’சின்ன வயசுலயே கணேஷ் ’வேலைக்காரன்’, ‘சிவா’ உள்ளிட்ட ரஜினி சாருடைய பல படங்கள்ல நடிச்சிருக்கார். அதனால ரஜினி சார்ன்னா அவருக்கு உயிர். நான் ரஜினி சார் படங்கள்ல நடிச்சதில்லை. ‘மனிதன்’ படத்துல மட்டும் மூணு நாள் டூப் போட்டேன். படத்துல என் சீன் வராது. அதனால எஸ்.பி.முத்துராமன் சாரைப் பார்க்கிறப்பெல்லாம் ரஜினி சார் படத்துல ஏன் என் சீன் வரலைன்னு அந்த சின்ன வயசுலயே கேப்பேனாம்.
முத்துராமன் சார் இதை ரஜினி சார்கிட்டச் சொல்லியிருக்கார். அதனால ஒரு தடவை அரசு தயாரிச்ச போலியோ விளம்பரப் படத்துல ரஜினி சார் பண்ணினப்ப, அந்தக் குழந்தையைக் கூட்டி வாங்கன்னு சொல்லியிருக்கார். அந்த விளம்பரப் படத்துல ரஜினி சார்கூட நடிச்சேன்.
அதனால கணேஷுக்கும் எனக்கும் ரஜினி சார் தான் குருன்னு சொல்லலாம்.
எங்க கல்யாணம் நடந்தப்போ அவர் ஊர்ல இல்ல. ஆனா முதல் முகூர்த்தப் புடவை வேஷ்டி எங்களுக்கு அவர்தான் எடுத்துத்தந்தார். ரெண்டு நாள் முன்னாடியே எடுத்து அனுப்பி வச்சிருந்தார்.
ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாள்னா நாங்க ரெண்டு பேருமே ரஜினி சார் சென்னையில இருந்தா நேர்ல போய் அவர்கிட்ட வாழ்த்து வாங்கிடுவோம். வெளியூர்ல இருந்தா போன்ல வாழ்த்து வாங்குவோம்.
இந்த வருஷம் சென்னையில் இருந்தார். அதனால மே 10ம் தேதி கணேஷ் பிறந்த நாள். அன்னைக்கு வரலமானு கேட்டுட்டு போயஸ் கார்டன் போனோம். இந்த வருஷம் எங்க அதிர்ஷ்டமோ என்னவோ ரொம்பவே ஃப்ரீயா இருந்தார். அதனால சுமார் 40 நிமிஷம் பேசிக்கிட்டிருந்திருப்போம்.
நாங்க நடிச்சிட்டு இருக்கிற படங்கள் பத்திக் கேட்டார். ஹெல்த் பத்தி விசாரிச்சார்.

நிறைய அட்வைஸ் தந்தார். குறிப்பா சினிமா தாண்டி வருமானத்துக்கு ஏதாவது வழி பண்ணி வைக்கணும்னு ரொம்பவே அக்கறையோட சொன்னார்.
சொந்தக்காரங்க கூட இந்த மாதிரி அக்கறையெல்லாம் படுவாங்களான்னு தெரியாது. ஆனா ரஜினி சார் அப்படி அக்கறைப்பட்டார்.
இன்னைக்கு அவரு இருக்கிற பிசியில அவ்வளவு நேரம் எங்களுக்காக ஒதுக்கித் தந்ததே எங்களுக்கு கிடைச்ச பாக்கியம்னுதான் சொல்வோம்’’ என ரொம்பவே நெகிழ்ச்சியுடன் முடித்தார் ஆர்த்தி.