
மும்பை: தென்மேற்கு பருவமழை நேற்று (மே 25, 2025) தொடங்கியதால் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (மே.26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 மாவடங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடகாவிலும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று (மே 25, 2025) தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இது கடந்த 35 ஆண்டுகளில் மாநிலத்தில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மும்பை மற்றும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை திவிரமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.