
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா லாபம் ஈட்டுவதற்காகவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில,“கடந்த 100 ஆண்டுகளில், அமெரிக்கா 260 போர்களை நடத்தியிருக்கிறது. அதே நேரத்தில் சீனா மூன்றில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிமுக்கிய வருவாய். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து மோதல்களை உருவாக்குகிறார்கள். அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகள் ஒரு காலத்தில் வளமானவை. ஆனால் இப்போது போர்களால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்காவின் தலையீடு
இந்த நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுதான் அவற்றின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம். அதே நேரம் அமெரிக்கா போரில் இரு தரப்பிலிருந்தும் விளையாடும். அதன் மூலம் இராணுவ-தொழில்துறை லாபத்தை மேம்படுத்திகொள்கிறது. அமெரிக்காவின் வளர்ச்சியே நாடுகளுக்கு மத்தியில் குழப்பத்தை உருவாக்கி, அதன் மூலம் பொருளாதாரத்தை கேள்விக்குறியக்கி, போரை உருவாக்கி லாபம் சம்பாதிப்பதில் இருக்கிறது.” என்றார்.
இதற்கு முன்பு, பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் நிர்பந்தத்தால் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களை ஆதரித்து வளர்த்தது. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கும் பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்காகவும் இந்த மோசமான வேலையைச் செய்து வந்தோம். ஆனால், அது தவறு, அதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.