
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கிறது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த வாரமே மழை தொடங்கி விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கி இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே நகரில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குர்லா, தாதர், சயான், பரேல் பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதோடு ரயில் தண்டவாளத்தில் நீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. போதிய வெளிச்சம் இல்லாமை மற்றும் மழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் தனது பயணிகளுக்கு தகவல் வெளியிட்டு வருகிறது.
மஞ்சள் எச்சரிக்கை
மும்பையின் தென்பகுதியில் உள்ள நரிமன் பாயின்ட் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 40 மிமீ அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மக்கள் தேவையில்லாத பட்சத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மும்பையில் 98 கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. அக்கட்டடத்தில் வசிப்பவர்களிடம் உடனே வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் குடியேறும்படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மும்பை, தானே, பால்கர் மாவட்டத்தில் மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை
இது தவிர கொங்கன் பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. புனே மாவட்டத்தில் உள்ள பாராமதியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. பாராமதி தொழிற்பேட்டையில் மூன்று கட்டடங்கள் பாதி இடிந்து விழுந்தது. அதில் இருந்தவர்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாராமதியை துணை முதல்வர் அஜித் பவார் நேரில் பார்வையிட்டார். இம்மாவட்டத்தில் 10 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் மக்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்து வருகிறது. குளம், ஏரிகள் நிரம்பியுள்ளது. சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. புனேயிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஐ.டி கம்பெனி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதியிலும் சாக்கடைகளில் தண்ணீர் நிரம்பியபடி செல்கிறது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் செயல்படும்படியும், தேவையில்லாத பட்சத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று பாராமதி தொகுதி எம்.பி சுப்ரியா சுலே கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராமதி மற்றும் இந்தாபூரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலை குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் சென்ற கார்கள் மற்றும் வாகனங்கள் தண்ணீர் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் வாகனபோக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியிலும் மழை விடாது பெய்து வருகிறது. மாநிலத்தில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.