
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி வழங்கி இருக்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப நல அசோசியேசனுக்கு இந்த நிதியை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் பேசிய ப்ரீத்தி ஜிந்தா,”நம் வீரர்களின் துணிச்சலான குடும்பங்களை ஆதரிப்பது நமது பொறுப்பாகும். நம் ராணுவ வீரர்கள் செய்த தியாகங்களை நாம் ஒருபோதும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும், நாம் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று அவர்கள் முன்னேற உதவ முடியும். நமது வீரர்களைப் எண்ணி நாம் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். மேலும் தேசத்திற்கும் அதன் துணிச்சலான பாதுகாவலர்களுக்கும் ஆதரவு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ப்ரீத்தி ஜிந்தா ஐ.பி.எல் பஞ்சாப் அணியின் பங்குதாரராக இருக்கிறார். கார்ப்ரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ஐ.பி.எல் அணியில் கிடைத்த வருமானத்தில் ப்ரீத்தி ஜிந்தா இந்த நிதியை வழங்கியிருக்கிறார்.