
முன்னாள் சாம்பியன் vs நடப்பு சாம்பியன்!
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் அதன் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. இந்த நிலையில், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெரும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட முன்னாள் சாம்பியன் ஹைதராபாத்தும், நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும் தனது கடைசி லீக் போட்டியில் நேற்று களமிறங்கின.
டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்த சீசன் தொடங்கியதும் முதல்முறையாக 300 ரன்களை அடிக்கப் போகும் அணி ஹைதராபாத்தான் என்ற பலரின் எதிர்பார்ப்பை, தனது கடைசி போட்டியிலாவது நிறைவேற்றும் முனைப்பில் ஹைதராபாத் இறங்கியது.
அதற்கேற்றாற்போலவே, அபிஷேக் சர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் முதல் ஓவரை பவுண்டரியில்லாமல் தொடங்கினாலும் பவர்பிளேயில் முடிவில் விக்கெட் விடாமல் 79 ரன்களைக் குவித்தனர்.
ஆனால், அடுத்த ஓவரிலேயே சுனில் நரைன் பந்துவீச்சில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸ் அடிக்க முயன்று 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் அபிஷேக் சர்மா.
பவர் காட்டிய ஹெட்!
அதற்கடுத்த ஓவரில் சிக்ஸ் அடித்து ஹெட் அரைசதம் கடக்க, ஒன்டவுன் இறங்கிய கிளாசன் தனது அதிரடி கிளாஸை பேட்டால் எடுக்கத் தொடங்கினார்.
ஹெட்டுக்கு ஸ்ட்ரைக்கே கொடுக்காமல் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர், 13-வது ஓவரில் குறுக்கே வந்த சுனில் நரைன் சுழலில் 76 ரன்களில் அவுட்டானார் ஹெட்.

இந்த விக்கெட் விழும்போது ஹைதராபாத் வெறும் 2 விக்கெட்டை இழந்து 175 ரன்களில் இருந்தது.
20 பந்துகளில் கிளாசன் 53 ரன்களுடனும், இஷான் கிஷான் ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் நிற்க, இன்றைக்கு ஹைதராபாத் நிச்சயமாக 300 ரன் என்ற நம்பிக்கை பிறந்தது.
இருவரின் அதிரடியால் 18 ஓவர்களில் 254 ரன்கள் தொட்டது ஹைதராபாத்.

37 பந்துகளில் சென்சுரி போட்ட கிளாசன்!
இந்த நேரத்தில்தான், 19 ஓவரில் இஷான் கிஷன் அவுட்டாக அதே ஓவரில் கடைசி பந்தில் இரண்டு ரன் எடுத்து 37 பந்துகளில் சதத்தைக் கடந்தார் கிளாசான்.
இறுதியில் அனிகேட் வர்மாவின் கேமியோவால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் 278 ரன்கள் குவித்தது ஹைதராபாத்.
மலைப்பிலேயே வீழ்ந்த கொல்கத்தா!
279 என்ற இமாலய இலக்கே மனதளவில் கொல்கத்தாவை உலுக்கிவிட்டது. இருப்பினும், ஏதோவொரு நம்பிக்கையில் நரைனும், டிகாக்கும் அந்த இலக்கை அடைய ஓப்பனிங் இறங்கினர்.
ஆனால், ஹைதராபாத் அணி எதிரணியை யோசிக்கவே விடாமல் நரைனையும், கேப்டன் ரஹானேவையும் விக்கெட் எடுத்து பவர்பிளேயில் கொல்கத்தாவை 59 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது.
இதோடு நிற்காத ஐதராபாத் பவுலர்கள் அடுத்த இரண்டு ஓவர்களில் டிகாக், ரின்கு சிங், ரஸல் ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி 8 ஓவர்களிலேயே தங்களின் வெற்றியை உறுதி செய்துவிட்டார்கள்.

அடுத்த 12 ஓவர்களில் 209 அடிப்பதெல்லாம் கனவில் நடப்பதே கடினமென்றாலும், 20 ஓவர்களையாவது முழுமையாக ஆடுவோம் என்று ரகுவன்ஷியுடன் கைகோர்த்தார் மணீஷ் பாண்டே.
நான்கு ஓவர் தாக்கு பிடித்த இந்தக் கூட்டணி 13-வது ஓவரில் ரகுவன்ஷியில் விக்கெட்டில் உடைந்தது.
அடுத்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸுக்கு முயன்று ரமன்தீப் சிங்கும் அவுட்டாக 14 ஓவர்களில் 110 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா.
அடுத்து களமிறங்கிய ஹர்ஷித் பெட்டிலிருந்து சிக்ஸர்கள் பறக்க நீண்ட நேரமாக ரன் அடிக்கப் போராடிக் கொண்டிருந்த மணீஷ் பாண்டே 18-வது ஓவரில் நடையைக் கட்டினார்.
அடுத்த பந்தில் வைபவ் அரோரா ரன் அவுட்டாக, அதற்கடுத்த ஓவரில் ஹர்ஷித் ராணா கேட்ச் அவுட்டாக இந்த சீசனில் கொல்கத்தாவின் ஆட்டம் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியோடு இந்த சீசனை நிறைவுசெய்தது ஹைதராபாத்.
உனாத்கட், ஈஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதமடித்த கிளாசன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs