
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாணும் பொறுப்பேற்றனர்.
இதற்கிடையில், ஆளும் அரசுக்கும் திரைத் துறைக்கும் மத்தியில் மோதல் போக்கு இருப்பதாக பேசப்பட்டது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்து ஒருவருடம் ஆகிறது. ஆனால் ஆந்திர திரையுலகினர் இன்னும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவில்லை.
இந்த புறக்கணிப்பு பவன் கல்யாணை வெளிப்படையாக விரக்தியடையச் செய்துள்ளது. அதனால், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “ தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும், திரைப்படத் துறையின் பிரதிநிதிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவில்லை. திரைத் துறைக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்குவது, திரைப்படத் துறையை மேம்படுத்துவது, திரைப்பட தயாரிப்பாளர்களின் மரியாதை குறையாமல் பார்த்துக் கொள்வது உள்பட அரசு இந்தத் துறைக்காக யோசித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், இந்தக் துறையில் இருப்பவர்களுக்கு ஆந்திரப் பிரதேச அரசு மீது குறைந்தபட்ச மரியாதையோ, நன்றியுணர்வோ கூட இல்லை. திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்கள் வெளியாகும் போது மட்டுமே வருவார்கள். ஆனால், திரைத் துறையை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள்.
அனைத்து திரைப்படத் தயாரிப்பாளர்களும் ஒன்றுபட வேண்டும் என்று நான் பரிந்துரைத்த பிறகும், இந்த அலட்சியம் தொடர்கிறது. முந்தைய YSRCP அரசின் போது தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை திரையுலகம் மறந்துவிட்டது.” எனக் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.