
தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை நேற்றே அறிவித்துவிட்டது.
ஆனால், பரளிக்காடு சூழல் சுற்றுலா மற்றும் வெள்ளியங்கிரி மலை குறித்து வனத்துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அந்த இரண்டு பகுதிகளுக்கும் மக்கள் இன்று சென்றனர்.
பரளிக்காடு சென்ற சுற்றுலா பயணிகளை வனத்துறை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு, மழை காரணமாக சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது. அதேபோல வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கும் தற்காலிக தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

“ரெட் அலர்ட், கனமழை ஆகியவற்றால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. மலை ஏறியுள்ள அனைவரும் உடனடியாக கீழே திரும்ப வேண்டும்.” என வனத்துறை கூறியுள்ளது.
அதேநேரத்தில் வெள்ளியங்கிரி மலையில் இன்று ஒரே நாளில் 2 பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (வயது 45) என்ற பெண் வெள்ளியங்கிரி 7-வது மலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 32) என்ற இளைஞர் வெள்ளியங்கிரி ஐந்தாவது மலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.” என்று வனத்துறை கூறியுள்ளது. இந்தாண்டு மட்டும் தற்போதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறிய 7 பேர் உயிரிழந்துள்ளனர்.