
மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எல். முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பினாமிகளின் ஆட்சி நடக்கிறது. ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா அல்லது இந்தத் தம்பிகளா என்ற சந்தேகம் எழுகிறது. முதலில் இந்தத் தம்பிகள் யார்.
அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார். அரசு அதிகாரிகளுக்கே உத்தரவு போடுமளவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது. இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு என்பதை மறந்து, இந்தத் தம்பிகள் தமிழகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியில் ஊழல் செய்து, தங்களின் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்தத் தம்பிகளுக்கும், திமுக குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? அவர்களை இயக்குவது யார். இந்தத் தம்பிகள் யார் என்று மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கவேண்டும்.

அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வழக்கைப்போல அரக்கோணம் வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றவேண்டும். தமிழகத்தில் சார்கள் மற்றும் தம்பிகளின் ஆட்சிதான் நடக்கிறது.
முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில் ஒரு அரசியல் ஸ்டண்ட் எடுப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். அதிகாரத்தின் மூலம் நாங்கள் யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக உலகத்தின் மிகப்பெரிய கட்சியாகும்.

உலகளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஒரே கட்சி பாஜக தான். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவின் 80 சதவிகிதம் நிலப்பரப்பில் ஆட்சியில் உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.” என்றார்.