
புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில், ஆயுதப்படைகளின் வீரத்தையும், பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தில் ஆபரேஷன் சிந்தூர் இந்தியர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் தலைமையை பாரட்டியிருந்த தீர்மானம், அவர் (மோடி) எப்போதும் ஆயுதப்படைகளை ஆதரித்து வந்துள்ளதாகவும், ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.