
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் புதிய பெண்ணுடன் தனது புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் படத்தில் காணப்படும் அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுக்கும் தனக்கும் 12 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் தேஜ் பிரதாப் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு சரியான நேரம் வாய்க்கவில்லை. இப்போது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இப்பதிவை பின்னர் நீக்கிய தேஜ் பிரதாப் யாதவ், தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், தனது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது தேஜ் பிரதாப் யாதவின் இந்நடவடிக்கைக்காக அவரை ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்து நீக்கி லாலு பிரசாத் யாதவ் நீக்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் வெளியிட்டுள்ள செய்தியில், “தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தை தவறவிடுவது சமுதாய நீதிக்கு போராடுவதை பலவீனப்படுத்தும், எனவே தேஜ் பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்.

மேலும் தனது மகன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முடிவுகளை எடுக்க முடியும். அவருடன் தொடர்பில் இருக்க விரும்புவோர் சுதந்திரமாக முடிவு செய்யலாம். பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மரியாதையை ஆதரித்து வருகிறேன். குடும்பத்தின் கீழ்ப்படிதலுள்ள உறுப்பினர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
2018ம் ஆண்டு தேஜ் பிரதாப் யாதவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராய் மகள் அனுஷ்காவை திருமணம் செய்தார். ஆனால் இத்திருமணம் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். 12 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த தேஜ் பிரதாப் ஏன் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.